புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் 1,830 மதுபாட்டில்கள் கடத்தல்; டிரைவர் கைது

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் 1,830 மதுபாட்டில்கள் கடத்தல்; டிரைவர் கைது போலீசாரை கண்டதும் காரை திருப்பியபோது விபத்து ஏற்பட்டதால் சிக்கினார்

Update: 2017-06-02 22:15 GMT

திண்டிவனம்,

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு திண்டிவனம் வழியாக காரில் 1,830 மதுபாட்டில்கள் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரை கண்டதும் காரை திருப்பியபோது விபத்து ஏற்பட்டதால் அவர் போலீசாரிடம் சிக்கினார்.

வேகமாக வந்த கார்

திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று காலை திண்டிவனம்–மரக்காணம் சந்திப்பு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார், திடீரென வலதுபுறமாக திரும்பியது. அந்த சமயத்தில்மோட்டார் சைக்கிளில் சென்ற சிங்கனூரை சேர்ந்த சரவணன் என்பவர் மீது கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் படுகாயமடைந்தார். இருப்பினும் அந்த கார் நிற்காமல், வேகமாக செல்ல முயன்றது.

மோட்டார் சைக்கிள் மீது மோதல்

இதை பார்த்ததும் போலீசாரும், அப்பகுதியை சேர்ந்தவர்களும் அந்த காரை மறித்தனர். உடனடியாக டிரைவர் அந்த காரை நிறுத்திவிட்டு இறங்கியதும், கதவை சாத்தினார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் 35 அட்டை பெட்டிகள் இருந்தன. அந்த அட்டை பெட்டிகளில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள 1,830 மதுபாட்டில்கள் இருந்தன.

கைது–பறிமுதல்

இதையடுத்து அந்த காரை ஓட்டிவந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த குப்புரத்தினம் மகன் ரஞ்சித்(வயது 35) என்பதும், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்கள் கடத்தி சென்றதும், வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை கண்டதும் காரை திருப்பியபோது விபத்தில் சிக்கியதால் மாட்டிக்கொண்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கடத்தி வந்த மதுபாட்டில்களும், அதை கடத்த பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் கண்டமங்கலம் அருகே பி.எஸ்.பாளையத்தில் நடமாடும் மதுவிலக்கு சோதனைச்சாவடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அந்த காரில் 465 மதுபாட்டில்கள் இருந்தது. காரில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், திருச்சி முசிறி பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 26), அசோக்குமார் (32) என்பதும், புதுச்சேரியில் இருந்து திருச்சிக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்