அப்துல்கலாமின் கனவுத்திட்டத்தை நிறைவேற்றும் வகையில் ராமேசுவரம் பள்ளிகளில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி

அப்துல்கலாமின் கனவுத்திட்டத்தை நிறைவேற்றும் வகையில் ராமேசுவரம் பள்ளிகளில் சூரியஒளி மின்சாரம் உற்பத்தி

Update: 2017-06-02 23:00 GMT

ராமேசுவரம்,

அப்துல்கலாமின் கனவுத்திட்டத்தை நிறைவேற்றும் வகையில் ராமேசுவரத்தில் பள்ளிகளில் சூரியஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

சூரிய ஒளி மின்சாரம்

ராமேசுவரம் பகுதி முழுவதும் சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்பது மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவுத் திட்டமாகவும், லட்சியமாகவும் இருந்தது. இதை நிறைவேற்றும் வகையில் ராமேசுவரம் ரோட்டரி கிளப், அமெரிக்காவில் உள்ள 7 ரோட்டரி கிளப்கள் சார்பில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் சூரியஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த ராமேசுவரம் தீவு பகுதியில் 26 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. பின்னர் அங்கு சூரிய ஒளி தகடுகள் மற்றும் அதற்கான சாதனங்கள் பொருத்தும் பணிகள் கடந்த 2 மாதத்திற்கு மேலாக நடந்து வந்தது.

ராமேசுவரத்தில் உள்ள அப்துல்கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய 1–ம் எண் பள்ளி, எஸ்.பி.ஏ. பெண்கள் மேல்நிலைபள்ளி, அரசு ஆண்கள் பள்ளி, புதுரோடு அரசு நடு நிலைப்பள்ளி, தங்கச்சி மடத்தில் உள்ள அரசுமேல் நிலைப்பள்ளி உள்பட 26 அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மேல்தளத்தில் சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் சூரிய ஒளி மின்சாரத்தை சேமித்து பள்ளியின் வகுப்பறைகளில் உள்ள மின்விளக்குகள், மின் விசிறிகள் அனைத்தும் சூரிய ஒளி மின்சாரத்தில் செயல்படும் வகையில் பள்ளிகளில் இதற்காக தனி அறை அமைப்பட்டு அதற்கான சாதனங்கள் அமைக்கும் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது. இதுதவிர தீவு பகுதிகளில் உள்ள 26 பள்ளிகளில் ரூ.71 லட்சத்து 60ஆயிரம் மதிப்பில் 13 ஸ்மார்ட் வகுப்பறைகளும் அமைக்கப் பட்டுள்ளன.

ஏற்பாடு

இதன் தொடக்க விழா நாளைமறுநாள்(திங்கட்கிழமை) ராமேசுவரம் சீதாதீர்த்தம் பகுதியில் உள்ள கோசுவாமி மடம் மண்டபத்தில் நடக்கிறது. விழாவில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுனர் விஜயகுமார், ரோட்டரிபவுண்டே‌ஷன் சேர்மன் ஷாஜகான், டாக்டர் சின்னத்துரைஅப்துல்லா, ராஜகோபாலன், மாவட்ட நிதி பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், துணை ஆளுனர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை ராமேசுவரம் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்