குன்னூர் அருகே மலை ரெயிலை வழிமறித்த 5 காட்டு யானைகளால் பரபரப்பு

குன்னூர் அருகே மலை ரெயிலை வழிமறித்த 5 காட்டு யானைகளால் பரபரப்பு டிரைவர் சாதுர்யமாக ரெயிலை நிறுத்தியதால் விபத்து தவிர்ப்பு

Update: 2017-06-02 22:30 GMT

குன்னூர்,

குன்னூர் அருகே மலை ரெயிலை வழிமறித்த 5 காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது. சாதுர்யமாக டிரைவர் ரெயிலை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

பலாப்பழ சீசன்

குன்னூர்– மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் காப்பி மற்றும் தேயிலை தோட்டங்களில் பலாமரங்கள் ஊடுபயிராக பயிரிடப்பட்டுள்ளன. தற்போது இந்த மரங்களில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. யானைகளுக்கு பலாப்பழம் மிகவும் பிடித்தமான உணவாகும் என்பதால், ஆண்டுதோறும் பலாப்பழ சீசன் தொடங்கும் காலங்களில் காட்டுயானைகள் சமவெளிவனப் பகுதியிலிருந்து பர்லியார் கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் ஆகிய பகுதிகளுக்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

குட்டிகளுடன் யானைகள்

இந்த நிலையில் நடப்பாண்டில் பலாப்பழ சீசன் தொடங்கியதும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு 2 குட்டிகளுடன் 3 காட்டு யானைகள் பர்லியார் மரப்பாலம் வழியாக ரன்னிமேடு பகுதிக்கு வந்தன. பின்னர் அங்குள்ள தனியார் தோட்டங்களில் இருந்த வாழை மரங்கள், பலா மரங்களை சேதப்படுத்தின. இது பற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று அந்த யானைகளை அடர்ந்த வன பகுதிக்கு விரட்டினர்.

இந்த நிலையில் மீண்டும் அந்த யானைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 2 குட்டிகளுடன் சிங்காரா எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்கு வந்து முகாமிட்டன. அங்குள்ள வாழை மரங்களை தின்று நாசம் செய்தன. பலா மரங்களில் தொங்கிய பலாப்பழங்களை பறித்து சாப்பிட்டன. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பீதி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வனவர் சவுந்தரராஜன் தலைமையில் வன ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று அந்த யானைகளை விரட்டினர்.

ரெயிலை வழிமறித்த யானைகள்

இந்த நிலையில் 2 குட்டிகள் உள்பட 5 யானைகளும், சிங்காரா பகுதியை விட்டு கீழே இறங்கி நேற்று காலை ஹில்குரோவ் பகுதிக்கு வந்தன. பின்னர் அந்த யானைகள் அங்குள்ள தண்டவாளத்தில் நின்றவாறு, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வந்து கொண்டிருந்த மலை ரெயிலை வழி மறித்தன. இதனை என்ஜின் டிரைவர் பார்த்ததால் சாதுர்யமாக ரெயிலின் வேகத்தை குறைக்க தொடங்கினார். இதனால் தண்டவாளத்தில் யானைகள் நின்றிருந்த 200 மீட்டர் தூரத்தில் ரெயில் வந்ததும் நிறுத்தப்பட்டது. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரெயில் என்ஜினில் இருந்து தொடர்ந்து ஒலி எழுப்பப்பட்டு, அந்த யானைகள் தண்டவாளத்தை விட்டு வனப்பகுதிக்குள் கடந்து சென்றன. இதன் காரணமாக மலை ரெயில் அங்கிருந்து 1 மணிநேரம் தாமதமாக குன்னூருக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்