கோவில்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

கோவில்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-02 20:30 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடை முற்றுகை

கோவில்பட்டி– குருமலை ரோடு நரிக்குறவர் காலனி அருகில் டாஸ்மாக் கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, கோவில்பட்டி மெயின் ரோடு பகுதியில் இருந்த பல டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் நரிக்குறவர் காலனி அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தினமும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மதுபிரியர்கள் ஏராளமானோர் வாகனங்களில் வந்து மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே நரிக்குறவர் காலனி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இந்திய கம்யூனிஸ்டு தாலுகா துணை செயலாளர் பாபு, நகர செயலாளர் பரமராஜ், மாதர் சங்க தலைவி சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கூறுகையில், இங்கு தாசில்தார் வந்து டாஸ்மாக் கடையை மூடுவதாக உறுதி அளிக்கும் வரையிலும் கலைந்து செல்ல மாட்டோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து மாலையில் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அதன்பிறகு மாலையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்