1. அச்சகத்திலேயே பணத்தைத் திருடிய காவலர்
தமிழ்நாடு காவல்துறையில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பெ.கண்ணப்பன்.
தமிழ்நாடு காவல்துறையில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பெ.கண்ணப்பன். எம்.எஸ்சி., எம்.பில். முடித்த இவர் தொடக்கத்தில் சென்னை லயோலா கல்லூரி உட்பட நான்கு கல்லூரிகளில் கணிதத் துறை உதவி பேராசிரியராக பணியாற்றினார். பிறகு 1987-ம் ஆண்டு துணை போலீஸ் சூப்பிரண்டாக காவல் பணியைத் தொடங்கிய இவர், படிப்படியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜி.யாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். தன்னுடைய பணி காலத்தில் சட்டம்-ஒழுங்கு, சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ., உளவுத்துறை என காவல்துறையின் உட்பிரிவுகள் பலவற்றில் திறம்பட பணியாற்றியவர். அவர் பணிபுரிந்த காலகட்டங்களில் பல சவாலான வழக்குகளை, சிறந்த முறையில் துப்பு துலக்கி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார். அவற்றில் சில சுவாரசியம் மிகுந்த வழக்குகளைப் பற்றிய தகவல்களை இந்தத் தொடரில் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்...
கடந்த ஆகஸ்டு மாதம், ரெயிலில் நடந்த திருட்டுச் சம்பவம் ஒன்று தமிழ்நாட்டையே உலுக்கியது. சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயிலில் ரூ.342 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டன. மர்ம நபர்கள் சிலர், அந்த ரெயிலின் மேற்கூரையில் ஓட்டைப் போட்டு ரூ.5 கோடியே 75 லட்சம் மதிப்பிலான பணத்தைத் திருடிச் சென்றுவிட்டனர். மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்த நூதனத் திருட்டு வழக்கில், இதுவரை எந்த ஒரு துப்பும் துலங்கவில்லை.
இது போன்ற வழக்கு ஒன்றை, சில வருடங்களுக்கு முன்பு மத்திய குற்றப்புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) புலன் விசாரணை மேற்கொண்டது. சில சுவாரசியமான திருப்பங்களுக்கு இடையில், அந்த வழக்கில் துப்பு துலங்கியது.
2004-ம் ஆண்டு நான் கேரள மாநில சி.பி.ஐ.யின் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாள் திருவனந்தபுரத்தில் உள்ள பாரத ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார்.
மைசூரில் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் அச்சகம் இருக்கிறது. அங்கிருந்து ரூ.500 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள், உரிய பாதுகாப்புடன் கண்டெய்னர் லாரிகள் மூலமாக திருவனந்தபுரம் பாரத ரிசர்வ் வங்கிக்கு வந்திருக்கிறது.
அங்கு வந்த ரூபாய் நோட்டுப் பெட்டிகளில் ஒன்றில் மட்டும் ரூ.500 மதிப்பு கொண்ட 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், அதாவது 50 லட்சம் ரூபாய் குறைவாக இருந்துள்ளது. பணத்திற்குப் பதிலாக அந்த பெட்டியில் சில பயனற்ற பொருட்கள் கிடந்துள்ளன.
இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து, திருவனந்தபுரம் பாரத ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர் ஒரு புகார் கொடுத்தார்.
இந்தத் திருட்டு குறித்து கேரள சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டது.
மைசூர் அச்சகத்தில் ரூபாய் நோட்டுகளை அச்சிடுதல், ரூபாய் நோட்டுகளுக்கு வரிசை எண் கொடுத்தல், பின்னர் அவைகளைக் கட்டு கட்டுகளாக வகைப்படுத்தி மரப்பெட்டிகளில் அடுக்கி வைத்தல், அந்த மரப்பெட்டிகளைப் பாதுகாப்பு பெட்டக அறையில் சேமித்து வைத்தல், பின்னர் பாரத ரிசர்வ் வங்கி ஆணையின் பேரில் ரெயில் அல்லது லாரிகள் மூலமாக உரிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி வைத்தல் போன்ற அனைத்து பணிகளும் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்புடன் செயல்பட்டு வரு கிறது.
திருட்டு போன ரூ.50 லட்சம் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை, அச்சகத்திற்கு வெளியே பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி எளிதில் எடுத்துச் செல்ல முடியாது என்பதை, எங்கள் முதல் கட்ட விசாரணையிலேயே உறுதிப்படுத்திக் கொண்டோம். அச்சகத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில், வழிக்காவல் பாதுகாப்பை மீறி அந்தத் திருட்டு நடைபெற வாய்ப்பில்லை என்பதையும் அடுத்தடுத்த விசாரணை எங்களுக்குத் தெளிவுபடுத்தியது.
அச்சகத்திற்குள் பொருத்தப்பட்டிருந்த அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளையும் பார்வையிட்டதில், அந்நிய நபர்கள் யாரும் பெட்டக அறையினுள் செல்லவில்லை. மேலும் சந்தேகப்படும் வகையில் ரூபாய் நோட்டு கட்டுகள் அடங்கிய பெட்டி அல்லது மூட்டை அச்சகத்திலிருந்து வெளியே கொண்டு சென்றதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
எனவே, அடுத்த கட்டமாக அச்சகத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த, நேர்மையான சில அதிகாரிகளிடம் ரகசியமாக விசாரணை செய்தோம். அந்த விசாரணையில் எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்தன. ‘அச்சக நிர்வாகத்தோடு, அச்சகப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு இணக்கமான உறவு இல்லை. சமீபத்தில் நடைபெற்ற நிர்வாக ஆலோசனைக் கூட்டத்தில் கூட, தங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், மிகப்பெரிய பிரச்சினையை நிர்வாகம் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் சவால் விட்டனர்’ என்று தெரிவித்தனர்.
புலன் விசாரணை முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு நாள் மைசூர் பகுதியில் அரசியல் கட்சி ஒன்றின் சார்பாக பொதுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய ஒரு அரசியல் பிரமுகர், திருட்டு போன ரூ.500 மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் சிலவற்றை மேடையில் காண்பித்து, ‘அச்சக அதிகாரிகளின் கபட நாடகம்தான் இந்தத் திருட்டு’ என்று அச்சக உயரதிகாரிகள் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம், ‘உங்களுக்கு இந்த ரூபாய் நோட்டுகள் எப்படிக் கிடைத்தன?’ என்று கேட்டதற்கு, அவர் கூறிய விளக்கம் ஏற்புடையதாக இருக்கவில்லை.
‘அச்சக நிர்வாகத்தைப் பணிய வைக்க, அச்சகப் பணியாளர்கள் செய்த கபட நாடகமாக இது இருக்குமோ? அச்சகப் பணியாளர்களின் மூலம் திருட்டுப்போன ரூபாய் நோட்டுகளில் சில, அரசியல் பிரமுகர்களின் கைக்குச் சென்றிருக்குமோ?’ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது. இதனால் சி.பி.ஐ. அதிகாரிகள், அச்சகப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் சந்தேகப்பட்ட அச்சக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் அனைவரும் மழுப்பலான பதிலையே கூறியதால், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட அச்சகப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளை உண்மையைக் கண்டறியும் சோதனைகளின் வாயிலாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.
சந்தேகம் இருக்கும் நபர்களிடம் இருந்து உண்மையைக் கண்டறிய, பொய் கண்டறிதல் சோதனை (Lie Detection Test), மூளை வரைபடம் (Brain Mapping) மற்றும் மயக்கப் பகுப்பாய்வு சோதனை (Narco Analysis Test) போன்ற அறிவியல் ரீதியான சோதனைகளைப் பயன்படுத்தி விசாரணை நடத்தப்படுவது உண்டு. இந்த முறைகளில் விசாரணை மேற்கொள்ள, நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும்.
சந்தேக நபரின் உடலில் ஒரு மருந்தைச் செலுத்தி, அவர் உண்மையை மறைக்கும் குணத்தை இழக்கச் செய்து, பின்னர் அவரிடம் வழக்கு குறித்து நடத்தப்படும் விசாரணை முறைதான் ‘மயக்கப் பகுப்பாய்வு’ சோதனையாகும். இதைக் கைதேர்ந்த மனோ தத்துவ மருத்துவர்களால் மட்டும்தான் செய்ய முடியும். இந்த சோதனை நடத்தும் பொழுது, புலன் விசாரணை செய்யும் அதிகாரி உடன் இருக்க அனுமதி கிடையாது.
இந்த விதத்தில் விசாரணை மேற்கொண்டதில், ஒரு சில சிக்கலான வழக்குகளில் துப்பு துலங்கி இருக் கிறது. எனவே, அந்த முறையிலேயே அச்சகப் பணியாளர்கள் சங்க நிர் வாகிகள் சிலருக்கு, பெங்களூருவில் உள்ள மருத்துவ பரிசோதனைக் கூடத்தில் மயக்கப் பகுப்பாய்வு சோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனையில், சங்க நிர்வாகிகளில் ஒருவர், ‘நான்தான் இந்த திருட்டைச் செய்தேன்’ என்று ஒப்புக்கொண்டார். ஆனால், அதைத் தொடர்ந்து செய்யப்பட்ட விசாரணையில், திருட்டு போன ரூபாய் நோட்டுகளில் ஒன்றைக்கூட அவரிடம் இருந்து கைப்பற்ற முடியவில்லை. திருட்டு வழக்கைப் பொறுத்தவரை, களவுபோன பொருட்களைக் கைப்பற்ற வேண்டும். இல்லையென்றால், அது முழுமையான புலன் விசாரணையாக இருக்காது.
வழக்கு விசாரணை மீண்டும் ஆரம்ப கட்டத்தில் இருந்து தொடங்கப்பட்டது. திருட்டு நடைபெற்ற நாட்களில் அச்சகப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவலர், மீண்டும் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார்.
அவரிடம், ‘இந்தத் திருட்டு குறித்த முழு விவரமும் உங்களுக்குத் தெரியும் என மயக்கப் பகுப்பாய்வு சோதனையில் துப்பு துலங்கி இருக்கிறது. உண்மையைக் கூறாவிட்டால், கடுமையான நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும்’ என்ற ரீதியில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின் பொழுது அந்தக் காவலர், தன் மனைவியைச் சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க, அதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ‘உங்கள் கணவர் உண்மையைக் கூறாவிட்டால், கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும்’ என்று அந்த காவலரின் மனைவியிடமும், சி.பி.ஐ. அதிகாரிகள் எடுத்துரைத்தனர். பெரிய மன போராட்டத்திற்குப் பிறகு, அந்தக் காவலர் வழக்கில் இருந்த முடிச்சுகளை அவிழ்க்க முன்வந்தார்.
அச்சகப் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் ஒருவர், இந்தத் திருட்டை நடத்த சில மாதங்களாகவே திட்டமிட்டுள்ளார். அச்சகத்தில் உள்ள பெட்டக அறையின் பூட்டிற்கு, மாற்று சாவி ஒன்றைத் தயார் செய்திருக் கிறார். பின்னர் அச்சகப் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு நாள் இரவு நேரத்தில், பெட்டக அறையினுள் சென்று, அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரப் பெட்டிகளில் ஒன்றைக் கவனமாகத் திறந்திருக் கிறார். அந்தப் பெட்டியில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டு களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து 10 ஆயிரம் நோட்டுகள் கொண்ட ‘மினிபேக்கெட்’ ஒன்றை எடுத்துக் கொண்டு, மரப்பெட்டிக்குள் பயனற்ற சில பொருட்களை வைத்து, அதை மீண்டும் முறையாக மூடி வைத்திருக்கிறார்.
அன்றிரவு மழை பெய்ததால், அந்தக் காவலரும், பணியில் இருந்த மற்ற காவலர்களும் அவர்களது சீருடையின் மேல் மழை கோட் அணிந்திருந்திருக்கிறார்கள். மரப்பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை, தான் அணிந்திருந்த மழை கோட்டுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு, அச்சகத்தை விட்டு அந்தக் காவலர் வெளியேறி இருக்கிறார்.
இவை அனைத்தையும் விசாரணை அதிகாரிகளிடம் கூறிய அந்த காவலர், தன் குடும்பச் செலவுக்காக ஒரு சிறிய தொகையைத், திருட்டைச் செய்த காவலரிடம் இருந்து கடனாகப் பெற்றதையும் ஒப்புக்கொண்டார்.
திருட்டை நடத்திய காவலரைப் பற்றி விசாரித்தபோது, அவர் பணி நிமித்தமாக மைசூரில் இருந்து பெங்களூருக்கு மாறுதலில் சென்றிருப்பது தெரியவந்தது. இரவோடு இரவாக பெங்களூரு சென்ற சி.பி.ஐ. குழு, அந்தக் காவலரைப் பிடித்து விசாரித்தது. அவரது தகவலின் பேரில், அவரது வீட்டையும், மற்றொரு காவலரின் வீட்டையும் சோதனை செய்து, திருடப்பட்ட ரூ.50 லட்சத்தில் ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மீதமுள்ள தொகையை அந்தக் காவலர், பல்வேறு வகைகளில் செலவு செய்திருந்தார்.
திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அந்த மூன்று காவலர்களும் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டதோடு, அவர்கள் மீது சி.பி.ஐ. வழக்கும் பாய்ந்தது.
இதுபோன்றதொரு குற்றச் செயல் நடக்குமேயானால், அங்கு பணிபுரியும் நபர்களின் நேரடியான அல்லது மறைமுகமான ஒத்துழைப்போ அல்லது உடந்தையோ இல்லாமல், அந்த சம்பவம் நடைபெற வாய்ப்பு இருக்காது.
-விசாரணை தொடரும்.