ஈரோட்டில் கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது

ஈரோட்டில் கிளினிக் நடத்திய போலி டாக்டரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Update: 2017-06-01 23:18 GMT
ஈரோடு,

ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள ஒரு கிளினிக்கில் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் கனகாசலகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின்பேரில் டாக்டர் வெங்கடேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள கிளினிக்கிற்கு நேற்று சென்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

அப்போது, ஈரோடு மாமரத்துப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 41) என்பவர் கிளினிக் வைத்து நடத்தி வந்ததும், அவர் எம்.எஸ்சி., பி.எட் படித்து இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சக்திவேலை மருத்துவக்குழுவினர் கையும், களவுமாக பிடித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலி டாக்டர்

சக்திவேலிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் விசாரணை நடத்தினார். விசாரணையில், சக்திவேல் முதுநிலை பட்டப்படிப்பு படித்து முடித்த பிறகு 10 ஆண்டுகளுக்கும் மேலாக மருந்துக்கடை வைத்து நடத்தி வந்து உள்ளார்.
இதனால் மருந்துகளின் விவரங்களை தெரிந்துகொண்ட அவர் தனியாக கிளினிக் வைத்து நடத்தினார். அதுமட்டுமின்றி கடந்த 7 ஆண்டுகளாக அவர் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததும்’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோட்டில் போலி டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்