விவசாயிகளை எதிர்க்கட்சியினர் தூண்டுகின்றனர் ‘பேச்சுவார்த்தைக்கு அரசு தயார்’

விவசாயிகளை எதிர்க்கட்சியினர் தூண்டுவதாகவும், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2017-06-01 22:36 GMT

மும்பை,

விவசாயிகளை எதிர்க்கட்சியினர் தூண்டுவதாகவும், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்

பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாயத்துக்கு இலவச மின்சாரம், வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான, லாபகரமான கொள்முதல் விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு காய்கறி, பால், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் வரத்து குறைந்தது. விவசாயிகளின் போராட்டம் குறித்து மும்பையில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

கமிட்டி

விவசாய அமைப்புகளை சேர்ந்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். அதன்படி, இந்த பேச்சுவார்த்தை தொடரும். விவசாயிகளின் சில கோரிக்கைகள் மீது அரசு சாதகமான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. சில கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தொடங்கிவிட்டோம்.

விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு அதற்கான பரிந்துரைகளை அளிக்குமாறு நிதித்துறை செயலாளர் மற்றும் வங்கி அதிகாரிகளை உள்ளடக்கிய கமிட்டியை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்த கமிட்டி 7 நாட்களில் தேவையான பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும்.

அரசியல் ஆதாயம்

விவசாயிகளை எதிர்க்கட்சியினர் தூண்டுகின்றனர். இந்த போராட்டத்தை பயன்படுத்தி சில அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடிக்கொள்கின்றன. வேளாண் பொருட்கள் நகர்ப்புறங்களுக்கு கொண்டு வரப்படாமல் நிறுத்தப்பட்டிருக்கிறது. விவசாயிகள் தங்களது பொருட்களை விற்பனை செய்ய அந்த அரசியல் கட்சியினர் அனுமதிக்கவில்லை.

புனே, நாசிக் மற்றும் அகமத்நகரில் விவசாயிகளின் போராட்டத்தின்போது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விவசாயிகள் ஒருபோதும் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள். இவை அனைத்தும் ஒரு சில அரசியல் கட்சிகளால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்