திண்டுக்கல்லில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் திண்டுக்கல்லில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-01 22:33 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே அடியனூத்து ஊராட்சியில் உள்ள பெருமாள்கோவில்பட்டி பொதுமக்களுக்கு மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதற்கிடையே அந்த மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அடைந்து விட்டது. இதனால் கடந்த ஒரு மாதமாக மேல்நிலை தொட்டியில் குடிநீர் ஏற்றப்படுவது இல்லை. மேலும் அந்த பகுதி மக்களுக்கு ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் விலைக்கு குடிநீர் வாங்கும் நிலைக்கு ஆளாகினர். மேலும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், புதிதாக மேல்நிலை தொட்டி கட்ட வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் அந்த பகுதி மக்கள் மனு கொடுத்தனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று நல்லாம்பட்டி பிரிவு பகுதியில் திரண்டனர்.

சாலை மறியல்

பின்னர் குடிநீர் வழங்கக்கோரி, திண்டுக்கல்–நத்தம் சாலையில் காலிக்குடங்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபக்கங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்ததும் அதிகாரிகள், திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெருமாள்கோவில்பட்டியில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்