போலீஸ் மந்திரி பதவியை ராஜினாமா செய்த பரமேஸ்வர்
காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டதன் எதிரொலியாக போலீஸ் மந்திரி பதவியை பரமேஸ்வர் ராஜினாமா செய்தார்.
பெங்களூரு,
காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டதன் எதிரொலியாக போலீஸ் மந்திரி பதவியை பரமேஸ்வர் ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை சித்தராமையாவிடம் அவர் நேரில் வழங்கினார்.
முழு நேர தலைவரை நியமிக்க...கர்நாடக காங்கிரஸ் தலைவராக இருப்பவர் பரமேஸ்வர். அவர் இந்த பதவிக்கு வந்து சுமார் 6 ஆண்டுகள் ஆகிறது. இவர் போலீஸ் மந்திரி பதவியையும் வகித்து வந்தார். அடுத்த ஆண்டு (2018) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், கர்நாடக காங்கிரசுக்கு முழு நேர தலைவரை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர். மேலும் மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
அத்துடன் தலைவர் பதவிக்கு நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல், முன்னாள் மந்திரி எஸ்.ஆர்.பட்டீல் ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன. இன்னொருபுறம் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க தனக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு பரமேஸ்வர் மேலிட தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தார். தேவைப்பட்டால் மந்திரி பதவியை தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். கட்சியில் உள்ள முன்னணி தலைவர்களின் ஆலோசனைகளை அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கேட்டு அறிந்தார்.
மந்திரி பதவி ராஜினாமாஇந்த நிலையில் நேற்று முன்தினம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் பரமேஸ்வரே நீடிப்பார் என்றும், ஆனால் அவர் மந்திரி பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கட்டளையிட்டது. அதன்படி முதல்–மந்திரி சித்தராமையாவை அவருடைய காவேரி இல்லத்தில் போலீஸ் மந்திரி பரமேஸ்வர் நேரில் சந்தித்து பேசினார். அப்போது தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை சித்தராமையாவிடம் பரமேஸ்வர் வழங்கினார்.
அந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட சித்தராமையா, வருகிற 5–ந்தேதி வரை போலீஸ் மந்திரி பதவியில் நீடிக்கும்படி பரமேஸ்வரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மந்திரி பதவியை ராஜினாமா செய்த பிறகு பரமேஸ்வர் நிருபர்களிடம் கூறியதாவது:–
கட்சி மேலிடத்தின் உத்தரவின்படி நான் மந்திரி பதவியை ராஜினாமா செய்து முதல்–மந்திரியிடம் கடிதம் கொடுத்துள்ளேன். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இனி கட்சியை பலப்படுத்தும் பணிகளில் நான் தீவிர கவனம் செலுத்துவேன். என் மீது நம்பிக்கை வைத்து மேலிடம் எனக்கு இந்த பெரிய பொறுப்பை மீண்டும் வழங்கியுள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கெர்ளகிறேன்.
சிறப்பான முறையில் நிர்வகித்தேன்கர்நாடகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து மட்டத்திலும் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவேன். இதற்காக நிர்வாகிகளின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. நாங்கள் ஒற்றுமையாக செயல்பட்டு, சட்டமன்ற தேர்தலில் காங்கிரசை மீண்டும் வெற்றி பெற வைப்போம்.
நான் போலீஸ் மந்திரியாக 1 ஆண்டு 7 மாதங்கள் பணியாற்றியுள்ளேன். இந்த துறையில் நான் பல்வேறு புதுமையான திட்டங்களை அமல்படுத்தினேன். போலீசாரின் சம்பளத்தை உயர்த்தினேன். போலீசாருக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுத்தேன். எனது இந்த பணியை சிறப்பான முறையில் நிர்வகித்தேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது. போலீஸ் இலாகா யாருக்கு ஒதுக்கப்படும் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதுபற்றி முதல்–மந்திரி முடிவு எடுப்பார்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.
உற்சாகமாக வரவேற்புமுன்னதாக காங்கிரஸ் மேலிடத்தின் அறிவிப்புக்கு பிறகு பரமேஸ்வர் முதல் முறையாக நேற்று குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்தும், டொள்ளு குனிதா நடனமாடியும், மேளதாளங்கள் முழங்கவும் அவரை வரவேற்றனர். காங்கிரஸ் அலுவலகத்தில் ஏராளமான நிர்வாகிகள் குவிந்ததால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது. மேலும் சிறிய அளவில் போக்குவரத்து நெரிசலும் உண்டானது. போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.