விதான சவுதாவை முற்றுகையிட முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்

நிரந்தர நீர் திட்டங்களை அமல்படுத்தக்கோரி நேற்று விதான சவுதாவை முற்றுகையிட முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Update: 2017-06-01 21:51 GMT

பெங்களூரு,

சிக்பள்ளாப்பூர், கோலார், துமகூரு, பெங்களூரு புறநகர் ஆகிய மாவட்டங்களுக்கு நிரந்தர நீர் திட்டங்களை அமல்படுத்தக்கோரி நேற்று விதான சவுதாவை முற்றுகையிட முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகளிடம் மந்திரி கிருஷ்ணபைரே கவுடா பேச்சுவார்த்தை நடத்தினார்.

நிரந்தர குடிநீர் திட்டம்

கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு, பெங்களூரு புறநகர் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசனத்துக்காக நிரந்தர திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நீண்டநாளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதை கண்டித்து அந்த மாவட்ட விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அடிக்கடி போராட்டங்கள் மற்றும் முழுஅடைப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆண்டு பெங்களூரு விதான சவுதாவையும் விவசாயிகள் முற்றுகையிட முயன்றனர். இருந்தாலும், அந்த மாவட்டங்களுக்கு குடிநீர்–பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. இதனால், மீண்டும் பெங்களூரு விதான சவுதாவை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக வந்து விதான சவுதாவை முற்றுகையிட விவசாயிகள் முடிவு செய்தனர்.

விதான சவுதாவை முற்றுகையிட முயற்சி

அதன்படி, சிக்பள்ளாப்பூர், கோலார் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள பல்வேறு விவசாய சங்கத்தினர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் விதான சவுதாவை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த போராட்டத்திற்கு கர்நாடக விவசாய சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இதனால், மோட்டார் சைக்கிள் ஊர்வலம் புறப்பட்ட பல்வேறு இடங்களில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், விவசாயிகள் தங்களது மோட்டார் சைக்கிளில் விதான சவுதாவை நோக்கி புறப்பட்டனர்.

தடுத்து நிறுத்தம்

இவ்வாறாக ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்ட விதான சவுதா முற்றுகை போராட்டம் தொடங்கியது. இருப்பினும், போராட்டம் குறித்து முன்கூட்டியே அறிந்த போலீஸ் துறை, விவசாயிகள் பெங்களூருவில் நுழையாமல் இருக்க தேவனஹள்ளி, நெலமங்களா உள்பட பெங்களூருவின் நுழைவு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இந்த பாதுகாப்பு பணியில் கர்நாடக ரிசர்வ் போலீசார் உள்பட 2,000–க்கும் அதிகமான போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

இதன் காரணமாக விதான சவுதாவை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் யாரையும் போலீசார் பெங்களூருவுக்குள் அனுமதிக்கவில்லை. சிக்பள்ளாப்பூர், கோலார் மாவட்ட விவசாயிகளை தேவனஹள்ளியிலும், துமகூரு மாவட்ட விவசாயிகளை நெலமங்களாவிலும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் உருவானது.

மந்திரி பேச்சுவார்த்தை

இதையடுத்து, பெங்களூருவின் நுழைவு பகுதிகளில் விவசாயிகள் சாலைகளில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் மாநில அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் விவசாயத்துறை மந்திரி கிருஷ்ணபைரேகவுடா தேவனஹள்ளிக்கு சென்று தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, அவர் கூறுகையில், ‘சிக்பள்ளாப்பூர், கோலார் மற்ற பிற மாவட்டங்களுக்கு நிரந்தர குடிநீர் மற்றும் பாசன திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எத்தினஒலே கூட்டு குடிநீர் திட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி தண்ணீர் சேமிப்பதற்காக புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படும். எனவே, போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள்’ என்றார்.

பரபரப்பு

மந்திரியின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட விவசாயிகள் மற்றும் நேற்றைய போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரும் நேற்று மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த போராட்டத்தையொட்டி பெங்களூரு தேவனஹள்ளி, நெலமங்களா பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததோடு, தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், விவசாயிகளை கைது செய்து அழைத்து செல்வதற்கான பி.எம்.டி.சி. பஸ்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்