ஊழியர்களின் வங்கிக்கணக்கில் இரட்டிப்பு சம்பள வரவு தொழில்நுட்ப கோளாறால் சம்பவம்

தொழில்நுட்ப கோளாறால் மதுரை கோட்ட ரெயில்வே ஊழியர்களின் வங்கிக்கணக்கில் 2 முறை சம்பளம் வரவு ஆனது.

Update: 2017-06-01 21:30 GMT
மதுரை,

தென்னக ரெயில்வே மதுரை கோட்டத்தில் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம் அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதற்காக முதுநிலை நிதி மேலாளர் தலைமையில் கணக்குப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே, சென்ற மே மாதத்துக்கான சம்பளம் நேற்று முன்தினம் ரெயில்வே ஊழியர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அப்போது ஒரு குறிப்பிட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ள அதிகாரிகள், ஊழியர்களின் வங்கிக்கணக்கில் மட்டும் சம்பளம் 2 முறை வரவானது. அதாவது, ரூ.30 ஆயிரம் சம்பளம் என்பது ரூ.60 ஆயிரமாக வரவானது.

இதுதொடர்பான வங்கியின் எஸ்.எம்.எஸ்.சை பார்த்த ஊழியர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தனர். பள்ளி, கல்லூரிகள் திறக்க இருப்பதால் கல்விக்கட்டணம், கல்லூரி கட்டணம், சீருடை, நோட்டு புத்தகங்கள் என பல்வேறு செலவுகளை சமாளிக்க திணறி வந்த ஊழியர்களுக்கு 2 முறை சம்பளம் வரவானது மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது.

தொழில்நுட்ப கோளாறு

இதனால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் உடனடியாக சம்பளப்பணத்தை வங்கிக்கணக்கில் இருந்து எடுத்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து தாமதமாகவே ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவர்கள் உடனடியாக இதுகுறித்து குறிப்பிட்ட வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, வங்கியில் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டது.

அதாவது ரெயில்வே கணக்குப்பிரிவில் இருந்து கொடுக்கப்பட்ட ஊழியர்களின் சம்பளப்பட்டியலை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 முறை சம்பளம் வரவானது தெரியவந்தது. இதைதொடர்ந்து 2 முறை சம்பளம் வரவு வைக்கப்பட்ட ஊழியர்களின் கணக்கில் இருந்து நேற்று வங்கிக்கணக்கிற்கு பணம் திரும்ப பெறப்பட்டது. சம்பளத்தை நேற்று முன்தினமே எடுத்துக்கொண்டவர்களிடம் இருந்து பணத்தை எப்படி வசூலிப்பது என்று ரெயில்வே நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்