343 தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை

கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 343 தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

Update: 2017-05-31 23:35 GMT

விழுப்புரம்,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்கை செய்ய அரசு வழிவகை செய்துள்ளது. இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு ‘ஆன்–லைன்’ மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் 223 நர்சரி பள்ளிகள், 120 மெட்ரிக் பள்ளிகள் என்று 343 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 5,281 சேர்க்கை இடங்கள் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி நிரப்பப்படுகின்றன. இதற்காக ‘ஆன்–லைன்’ மூலம் 3,319 பேர் விண்ணப்பித்தனர்.

இந்த குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்காக தேர்வு செய்யும் நிகழ்ச்சி நேற்று அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது. முதலாவதாக வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவினரான ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளியாக இருக்கும் குழந்தைகள், 3–ம் பாலினத்தவர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தை, துப்புரவு தொழிலாளியின் குழந்தைகள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் குலுக்கல் இன்றி மாணவர் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்டது.

குலுக்கல் முறையில்...

அதனை தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருப்பிடத்தில் வசிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரான பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோரின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்காக அவர்களின் விண்ணப்பங்களை கொண்டு குலுக்கல் நடத்தி மாணவர் சேர்க்கை செய்யப்பட்டது.

இந்த குலுக்கல் நடத்தப்பட்ட பின்னரும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் காலியிருப்பின் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவில் வசிப்போருக்கு குலுக்கல் நடத்தப்பட்டது. இதற்காக ஏராளமான குழந்தைகளுடன் அவரவர் பெற்றோர்கள் வந்திருந்தனர். இந்த குலுக்கல் குழந்தைகளின் பெற்றோர்கள், பள்ளி முதல்வர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விவரம் அந்தந்த பள்ளியின் தகவல் பலகையில் ஒட்டப்படும். இவர்களுக்கு வருகிற 5–ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி சேர்க்கை வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதன்மை கல்வி அலுவலர் பார்வையிட்டார்

விழுப்புரம் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குலுக்கல் முறையில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற மாணவர் சேர்க்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி பார்வையிட்டார். அப்போது உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் முகையூர் ரவிச்சந்திரன், காணை மேத்யூ, பள்ளியின் செயலாளர் பழனிவேல், முதல்வர் பாட்சா, பொருளாளர் லோகையன், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் கென்னடி, ஆரோக்கியமேரி, மரியபிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்