விழுப்புரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

விழுப்புரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-05-31 23:32 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே அதனூர், விநாயகபுரம், தர்மாபுரி ஆகிய கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக கிராம மக்களுக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டால் 3 கிராம மக்களும் மிகவும் சிரமப்பட்டனர். எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9 மணியளவில் காலி குடங்களுடன் அதனூர் பஸ் நிறுத்தம் அருகில் திரண்டனர். திடீரென இவர்கள் அனைவரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம்– திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கெடார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் காலை 10 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்