மண் கடத்திய டிராக்டர், டிப்பர் லாரிகளை 2–வது நாளாக பொதுமக்கள் சிறைபிடிப்பு

ஓமலூர் அருகே, ஏரியில் மண் கடத்திய டிராக்டர்கள், டிப்பர் லாரிகளை பொதுமக்கள் நேற்று 2–வது நாளாக சிறைபிடித்தனர். அப்போது அவர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-05-31 22:30 GMT

ஓமலூர்,

ஓமலூர், காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள 175–க்கும் மேற்பட்ட ஏரிகளில் வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காடையாம்பட்டி வட்டாரம் கஞ்சநாயக்கன்பட்டி வேலாயுதம்பிள்ளை ஏரியில் இருந்து செங்கல் சூளைகளுக்கு மண் கடத்திச்சென்ற டிராக்டர், டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

அப்போது மண் கடத்தலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர் சிறை பிடிக்கப்பட்ட டிராக்டர்கள், டிப்பர் லாரிகள் இரவில் விடுவிக்கப்பட்டன.

2–வது நாளாக

இந்த நிலையில் நேற்றும் கஞ்சநாயக்கன்பட்டி வேலாயுதம்பிள்ளை ஏரியில் இருந்து டிப்பர் லாரிகள், டிராக்டர்களில் மண் அள்ளி கடத்திச் செல்லப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் செம்மாண்டப்பட்டி – கஞ்சநாயக்கன்பட்டி சாலையில் மண் கடத்திச்சென்ற வாகனங்களை நேற்று 2–வது நாளாக சிறைபிடித்தனர். அப்போது அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செம்மாண்டப்பட்டி வருவாய் ஆய்வாளர் பன்னீர் செல்வம் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.


மேலும் செய்திகள்