உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் மத்திய இணை மந்திரி ஆய்வு

சேலத்தில் சிறு, குறு தொழில் குழுமம் திட்டத்தில் கட்டப்படும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் மத்திய இணை மந்திரி எச்.பி.சவுத்திரி ஆய்வு செய்தார்.

Update: 2017-05-31 22:18 GMT

சேலம்,

சேலம் சீலநாயக்கன்பட்டியில் மத்திய சிறு மற்றும் குறு தொழில் குழுமம் திட்டத்தின் கீழ் எவர்சில்வர் பைப், வாகனங்கள் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டப்பணிக்கு மத்திய அரசு வழங்கும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என்று நேற்று மத்திய இணை மந்திரி எச்.பி.சவுத்திரி, தொழிற்சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து எச்.பி.சவுத்திரி நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் சிறு மற்றும் குறு தொழில்துறை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வங்கிகளில் முதலீடு அதிகரித்து உள்ளது. இதனால் வங்கிகளே வீடு தேடி சென்று கடன் கொடுக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்த நிதியாண்டில் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்க ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிணையில்லா கடன்

முத்ரா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வங்கியும் ஒரு எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஒரு மகளிர் ஆகியோருக்கு கண்டிப்பாக கடன் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு தொழில்துறை வளர்ச்சியடைய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாட்டு இறைச்சி விவகாரத்தில் எதிர்ப்பு இருந்தால் அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது சேலம் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ராஜேந்திரன், சேலம் மாவட்ட சிறு, குறு தொழிற்சாலை சங்க தலைவர் பொறியாளர் மாரியப்பன் ஆகியோர் அருகில் இருந்தனர்.


மேலும் செய்திகள்