பிரேக் பழுதானதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 10 கி.மீட்டர் தூரம் ஓடிய ரெயில் என்ஜின்

திடீரென பிரேக் பழுதானதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 10 கி.மீட்டர் தூரம் ரெயில் என்ஜின் ஓடியது. அப்போது எதிரே ரெயில்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Update: 2017-05-31 23:15 GMT
திருச்சி,

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 1-ஏ பிளாட்பாரத்தில் இருந்து நேற்று அதிகாலை 6.45 மணிக்கு ஈரோடு பயணிகள் ரெயில் புறப்பட தயாராக இருந்தது. வழக்கமாக அந்த ரெயிலில் 2 என்ஜின்கள் இணைக்கப்பட்டு ஈரோடு புறப்பட்டு செல்லும். இதற்காக பொன்மலை ரெயில்வே பணிமனையில் இருந்து பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்ட ஒரு என்ஜினை டிரைவர் உதயசங்கர் (ஷன்ட்டர்) ஓட்டி வந்து மற்றொரு என்ஜினில் இணைத்தார். இந்த இரு என்ஜின்களையும் ஈரோடு பயணிகள் ரெயிலுடன் இணைத்ததும் ரெயில் புறப்பட வேண்டும். இந்நிலையில் இரு என்ஜின்களையும் ஈரோடு பயணிகள் ரெயிலுடன் இணைக்க முற்பட்டபோது, பராமரிப்பு பணிகள் முடிந்து வந்த அந்த என்ஜின் திடீரென ஓடத்தொடங்கியது. இதனால் அந்த என்ஜினில் இருந்த டிரைவர் உதயசங்கர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் பிரேக்கை பிடித்து என்ஜினை நிறுத்த முயன்றார். ஆனால் திடீரென பழுது ஏற்பட்டதால் பிரேக் பிடிக்காததால் அந்த என்ஜின் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி நிற்காமல் சென்றது. இதனை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜங்ஷன் ரெயில்நிலையம் அருகே ஓடி சென்று ஆங்காங்கே தண்டவாளத்தில் கற்களை வைத்து என்ஜினை நிறுத்த முயன்றனர். ஆனாலும் அந்த என்ஜின் பாலக்கரை ரெயில் நிலையம், கோட்டை ரெயில் நிலையம் வழியாக நிற்காமல் சென்று கொண்டே இருந்தது. இது பற்றி ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

நிற்காமல் சென்ற என்ஜின்

உஷார் அடைந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அந்த என்ஜினை தங்கு தடையின்றி செல்லும் வகையில் வழித்தடத்தை மாற்றி விட்டனர். இதனால் என்ஜினுக்கு மட்டும் சிக்னல் கிடைத்தது. எதிர்மார்க்கத்தில் வரும் ரெயில்களுக்கு சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் எதிரே எந்த ரெயிலும் வரவில்லை. தொடர்ந்து கோட்டை ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து என்ஜினை நிறுத்த முயற்சித்தனர். ஆனாலும் பலனளிக்கவில்லை.

அந்த என்ஜின் கம்பரசம்பேட்டையை அடுத்த முத்தரசநல்லூர் அருகே 10 கி.மீட்டர் தூரம் சென்றபோது, அதற்கு மேல் மேட்டுப்பகுதி என்பதால் மேற்கொண்டு நகராமல் நின்றது. உடனே இது குறித்து என்ஜின் டிரைவர் உதயசங்கர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

பெரும் விபத்து தவிர்ப்பு

உடனடியாக அங்கு விரைந்து சென்று அந்த என்ஜினை கோட்டை ரெயில் நிலையத்துக்கு ஓட்டி வந்தனர். அங்கு என்ஜினில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர். இதற்கிடையே திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஈரோடு பயணிகள் ரெயிலில் மாற்று என்ஜினை பொருத்தி ½ மணிநேரம் தாமதமாக காலை 7.15 மணிக்கு ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றது.

கோட்டை ரெயில் நிலையத்தில் என்ஜினை சரி செய்து கொண்டு இருந்தபோது, காலை 7.40 மணி அளவில் எர்ணாகுளத்தில் இருந்து திருச்சி வழியாக காரைக்காலுக்கு செல்லும் டீ கார்டன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இந்த ரெயில் கோட்டை ரெயில் நிலையத்தை அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் பிரேக் பிடிக்காமல் ஓடிய என்ஜினையும் அங்கு கொண்டு வந்தனர். சிறிதுநேரம் தாமதித்து இருந்தாலும் டீ-கார்டன் எக்ஸ்பிரஸ் ரெயிலும், பழுதான என்ஜினும் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கக்கூடும். அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே பொறியாளர்கள் மற்றும் என்ஜின் ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட என்ஜின் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்