மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

குடவாசல் அருகே மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-05-31 23:00 GMT
குடவாசல்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சேங்காலிபுரம்-வடவேர் சாலையில் மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடையின் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளதால் மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாலை வழியாக வேலைக்கு செல்லும் பெண்கள் மாலை நேரங்களில் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இதனால் இந்த மதுக்கடைய அகற்றக்கோரி பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் மதுக்கடையை அகற்றக்கோரி அந்தபகுதி சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த மாலதி, சாவித்திரி, ஜெயா ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகேஷ், அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா அணி) ஒன்றிய அமைப்பாளர் அன்புசெல்வன், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாணவ- மாணவிகளுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் டாஸ்மாக் மேற்பார்வை அலுவலர் கண்ணன், உதவி மேலாளர்(கணக்கு) காளிதாஸ், குடவாசல் தாசில்தார் அன்பழகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சந்தனமேரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முற்றுகை போராட்டத்தால் மதுக்கடை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்