சத்துணவு அமைப்பாளர் பணிக்கு தேர்வான பெண் உதவி சமையலரை இடையூறு செய்யக்கூடாது

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு தேர்வான உதவி சமையலரை இடையூறு செய்யக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-05-31 22:15 GMT

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ராணிமகராஜபுரத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி. பிளஸ்–2 படித்துள்ளார். திருமணமான சில ஆண்டுகளில் இவரது கணவர் இறந்துவிட்டார். இவர்களுக்கு மனவளர்ச்சி குன்றிய 2 குழந்தைகள் உள்ளனர். ராணிமகராஜபுரத்தில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் உதவி சமையலராக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் சத்துணவு பணியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து அந்த பணிக்கு மகேஸ்வரி விண்ணப்பித்தார். அதன்பேரில் வலவிளை ஊராட்சி தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து தற்போதைய உதவி சமையலர் பணியை ராஜினாமா செய்வதாக அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். அவர் ராஜினாமா கடிதம் அளிப்பதில் விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி அவரை பணியில் இருந்து விடுவிக்க மறுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

ஐகோர்ட்டில் வழக்கு

இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை வலவிளை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியில் நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.

அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, “புதிய பணிக்கான பணி நியமன ஆணையைப் பெற்ற பின், ராஜினாமா கடிதத்தை காலதாமதமாக சமர்ப்பித்துள்ளார். எனவே அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை“ என்றார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

மனுதாரர் வேறு வேலைக்கு விண்ணப்பித்து தேர்வானதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஏற்கனவே பணியாற்றிய இடத்தில் இதுபற்றி தகவல் தெரிவித்து, முறையாக ராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கவில்லை என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. மனுதாரரின் சூழ்நிலையின்படி பார்க்கையில், அவருக்கு மனவளர்ச்சி குன்றிய 2 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட சூழலில் இருக்கும் ஒருவர் வேறு ஒரு நல்ல பணியை தேடிச்செல்வதில் எவ்வித தவறும் இல்லை. இதனால் யாருக்கும் தனிப்பட்ட பாதிப்பு இல்லை. அறியாமையால் தான் விதிமுறைகளை மீறி உள்ளார்

. இடையூறு செய்யக்கூடாது

மனுதாரர் செய்த தவறை வைத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறியாமையால் செய்த தவறை பெரிய குற்றமாக கருத வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் விண்ணப்பிக்கப்பட்ட பணிக்கு மனுதாரர் தகுதியானவரா, அவர் மீது ஏதேனும் சட்டரீதியான தடை உள்ளதா என்பதை மட்டும் பார்த்து, மனுதாரர் தேர்வாகி உள்ள பணிக்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். அதுவரை அவர் தற்போதுள்ள பணியில் தொடர எவ்வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்