அரியமங்கலம் குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து தீயை அணைக்க போராட்டம்
திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. நாளொன்றுக்கு 400 டன் அளவுக்கு குப்பைகள் கொட்டப்படுவதால் அங்கு மலைபோல் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. அரியமங்கலம் குப்பை கிடங்கில் அவ்வப்போது திடீர், திடீரென தீ விபத்து ஏற்பட்டு குப்பைகள் எரிய தொடங்கும். உடனே தீயணைப்பு துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.
இதனை தொடர்ந்து அரியமங்கலம் குப்பை கிடங்கை அங்கிருந்து வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மதியம் அரியமங்கலம் குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. தீ மள, மளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் புகைமூட்டமும் ஏற்பட்டது. இதனை கண்ட அந்த பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் போராட்டம்தீயணைப்பு வீரர்கள் 6 வாகனங்களில் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியாததால் மாநகராட்சியில் இருந்து 15–க்கும் மேற்பட்ட லாரிகளில் தொடர்ந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அதனை கொண்டு தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்தது. இதனால் ஏற்பட்ட புகையால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் நேற்று நள்ளிரவுக்கு மேலும் தீயை அணைப்பதற்காக தொடர்ந்து போராடினார்கள். சமூக விரோதிகள் யாரும் தீ வைத்ததால் குப்பை கிடங்கில் தீப்பிடித்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என அரியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.