கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை போலீஸ் சூப்பிரண்டு தகவல்

திருவள்ளூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

Update: 2017-05-31 22:45 GMT
பூந்தமல்லி,

திருவள்ளூரை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் திருவள்ளூரை அடுத்த தொடுகாடு கிராமத்தில் பழைய இரும்பு கடை மற்றும் பேப்பர் கடை வைத்து நடத்தி வருகிறார். அங்கு காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சைமன் (வயது 40) என்பவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சைமன் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சைமனை சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அதே மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

பலத்த காயம் அடைந்த சைமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். அவரை யார் கொலை செய்தனர்?, எதற்காக கொலை செய்தனர்? என்ற விவரங்கள் தெரியவில்லை. அவர் தொழில்போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 தனிப்படைகள்

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

தொழிலாளி கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்