ஏரியை தூர்வார ஒப்பந்தம் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய என்ஜினீயர் உள்பட 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை

அரியலூர் அருகே ஏரியை தூர்வார ஒப்பந்தம் வழங்குவதற்கு ரூ.32 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில், என்ஜினீயர் உள்பட 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2017-05-31 21:30 GMT

தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்பிரகாசம். இவர் கடந்த 1999–ம் ஆண்டு செதலவாடி பெரிய ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணிக்கும், வேட்டைக்குடிக்காடுப்பட்டி கிராமத்தில் தார்சாலை அமைக்கும் பணிக்கும் ஒப்பந்தம் வழங்க கேட்டு செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இந்த ஒப்பந்தம் வழங்குவதற்கு ரூ.32 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று அப்போது உடையார்பாளையத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் உதவி கோட்ட என்ஜினீயராக பணியாற்றிய நாம்தேவ் கூறினார். அவருக்கு இடைத்தரகராக செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலக மதிப்பீட்டாளராக பணியாற்றிய தம்புசாமி செயல்பட்டார்.

7 ஆண்டு சிறைதண்டனை

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அருள்பிரகாசம், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அவர்களின் அறிவுரையின் பேரில், அருள்பிரகாசம் செயல்பட்டார். இதையடுத்து ரூ.32 ஆயிரம் லஞ்சம் பெற்ற நாம்தேவ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தம்புசாமி ஆகியோரை கடந்த 12.11.1999–ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட நாம்தேவ் மற்றும் அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட தம்புசாமி ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.32 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்