கோவில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் கருணாகரன் தகவல்
நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் கருணாகரன் தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் கருணாகரன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
முன்னாள் படைவீரர்கள்நெல்லை மாநகரத்தில் உள்ள 32 கோவில்களிலும், மாவட்டத்தின் இதர பகுதிகளில் உள்ள 79 கோவில்களிலும் இரவு பாதுகாப்பு பணிக்காக முன்னாள் படைவீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
நெல்லை மாநகரம் மற்றும் நெல்லை தாலுகா, தாழையூத்து, கங்கைகொண்டான், சிவந்திப்பட்டி, அம்பை, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், முக்கூடல், சுரண்டை, குற்றாலம், செங்கோட்டை, ஊத்துமலை, பாவூர்சத்திரம், தென்காசி, சாம்பவர் வடகரை, ஆய்குடி, அச்சன்புதூர், கரிவலம்வந்தநல்லூர், திருவேங்கடம், வாசுதேவநல்லூர், பணகுடி, மூலக்கரைப்பட்டி, களக்காடு வீரகேரளம்புதூர், குருவிகுளம் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கோவில்களில் பாதுகாப்பு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
30–ந்தேதிக்குள்...கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு தகுதி வாய்ந்த, உடல் திடகாத்திரமாக உள்ள 61 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள் தங்களுடைய அடையாள அட்டை, அசல் படைவிலகல் சான்று மற்றும் போட்டோவுடன் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பத்தை வருகிற 30–ந்தேதிக்குள் பாளையங்கோட்டையில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.