டாஸ்மாக் கடைக்கு எதிராக 2–வது நாளாக பெண்கள் போராட்டம்

திருவட்டார் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2–வது நாளாக பெண்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-05-31 23:00 GMT
திருவட்டார்,


திருவட்டார் அருகே உள்ள சுனப்பாறவிளை பகுதியில் புதிய டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதை அறிந்ததும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். குறிப்பாக பெண்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்தனர்.

டாஸ்மாக் கடை அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட கட்டிடத்தின் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கண்ணனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜ் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் நேற்று முன்தினம் காலை முதல் தொடர்ந்து இரவு 11 மணி வரை கொட்டும் மழையில் நடைபெற்றது.

2–வது நாளாக போராட்டம்


இந்தநிலையில் 2–வது நாளாக நேற்று காலை 9 மணிக்கு மதுக்கடை கட்டிடத்தின் முன்பு ஏராளமான பெண்கள் திரண்டு வந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் அங்கேயே கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், மதுக்கடைக்கு எதிரான கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து போராட்டக்குழு தலைவரும், கண்ணனூர் ஊராட்சி முன்னாள் தலைவருமான ராஜ் கூறுகையில், டாஸ்மாக் கடை அமைப்பதற்கான தேர்வு செய்யப்பட்டுள்ள சுனப்பாறவிளை பகுதியின் சாலையோரத்தையொட்டி சிற்றாறு பட்டணம் கால்வாய் உள்ளது. இது மிகவும் ஆபத்தான பகுதியாகும். சுனப்பாறவிளை சந்திப்பு பகுதியை சுற்றியுள்ள வாரியன்குழிவிளை, ஆலுவிளை, பூக்கோடு ஆதி திராவிடர் காலனி, பூந்தோப்பு என 4 கிராமங்களை உள்ளடக்கி உள்ளது. இந்த கிராமங்களை சேர்ந்த பெண்கள், மாணவ–மாணவிகள் செல்லும் முக்கிய சந்திப்பு பகுதியாகும். மேலும், 500 மீட்டர் தூரத்தில் 5 ஆலயங்கள் மற்றும் கோவில்கள் உள்ளது. எனவே இங்கு மதுக்கடை அமைந்தால் இந்த கிராமத்தின் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை ஏற்படும் என்றார். இந்த போராட்டத்தில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஜெகநாதன், திருவட்டர் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெகன்ராஜ், பா.ஜ.க. பழனிதங்கம், காங்கிரஸ் பிரமுகர் விஜயகுமார், கம்யூனிஸ்ட் கட்சி சைமன்சைலஸ், அ.தி.மு.க. ஜஸ்டின்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்