திருத்தணி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

திருத்தணி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-05-30 22:00 GMT

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த நாகலாபுரம் சாலையில் உள்ள தாழவேடு அருந்ததியர் காலனியில் கடந்த 15 நாட்களாக சீராக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. தங்களுக்கு சீராக குடிநீர் வழங்காததை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் நாகலாபுரம் சாலையில் காலி குடங்களுடன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆழ்துளை கிணறு

திருத்தணியை அடுத்த பி.டி.புதூரில் நேற்று முன்தினம் தங்களுக்கு குடிநீர் வழங்கக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதிமொழி அளித்ததையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து உடனடி நடவடிக்கையாக நேற்று அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை கோ.அரி எம்.பி., வட்டார வளர்ச்சி அதிகாரிகள், திருத்தணி ஒன்றிய குழு முன்னான் தலைவர் இ.என்.கண்டிகை ரவி ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்