சேலத்தில் உணவகங்களில் வாழை இலைகளை பயன்படுத்த வேண்டும்
சேலத்தில் உள்ள உணவகங்களில் வாழை இலைகளை பயன்படுத்த வேண்டும் என கலெக்டரிடம் இளைஞர் குழுவை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர்.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 256 மனுக்கள் வரப்பெற்றது.
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
வாழை இலைகள்குறைதீர்க்கும் கூட்டத்தில் சேலம் இளைஞர் குழுவை சேர்ந்தவர்கள் ‘‘வாழை இலையை பயன்படுத்துவோம், பிளாஸ்டிக்கை ஒழிப்போம்‘‘ என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் வந்து கலெக்டர் சம்பத்திடம் புகார் மனு கொடுத்தனர். அதில், சேலத்தில் உள்ள பல உணவகங்களில் புற்று நோயை உண்டாக்கும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்தி உணவு வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் பல வகையில் நோயால் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. இதுபோல் அம்மா உணவகங்களிலும் வழங்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்து, உணவகங்களில் வாழை இலைகளை மட்டுமே பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இந்த மனுவினை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதாவிடம் கலெக்டர் சம்பத் வழங்கி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.