துவாக்குடியில் ஜல்லிக்கட்டு: காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்

துவாக்குடியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

Update: 2017-05-29 22:45 GMT
திருவெறும்பூர்,

திருவெறும்பூரை அடுத்த துவாக்குடியில் சித்திரை ஏர்முனை விழாவையொட்டி அங்காளம்மன் கோவில் திடலில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதையொட்டி கால்நடைத்துறை இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா தலைமையில் கால்நடை டாக்டர்கள் குழுவினர் காளைகளையும், வட்டார மருத்துவ அலுவலர் சுகுமாறன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் மாடுபிடி வீரர்களையும் பரிசோதனை செய்தனர். பின்னரே காளைகளும், வீரர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடின

காளைகளை கயிற்றால் கட்டி, வாடிவாசலின் பின்புறம் உரிமையாளர்கள் இழுத்து வந்தனர். போதிய இட வசதி இன்றி, சந்துகளில் கொண்டு வர வேண்டியிருந்ததால், சில காளைகள் மிரண்டு கயிற்றை அறுத்துக்கொண்டு ஊருக்குள் ஓடின. இதனை பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் சிதறி ஓடினர். மிரண்டு ஊருக்குள் ஓடிய காளைகள் முட்டியதில் 2 பேர் காயமடைந்தனர்.இதையடுத்து போலீசார் நிலைமையை சரி செய்தனர். இதன் பின்னர் காளைகளை அதன் உரிமையாளர்கள் பிடித்து வாடிவாசலின் பின்புறம் வரிசையாக நிறுத்தினர். அதன் பின்னர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

காளைகளை அடக்கினர்

போட்டியை கோட்டாட்சியர் ராஜ்குமார், தாசில்தார் ஷோபா ஆகியோர் தொடங்கி வைத்தனர். வாடிவாசல் வழியாக முதலில் பழங்கனாங்குடி முத்து மாரியம்மன் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

இதில் காளைகள் முட்டியதில் பார்வையாளரான துவாக்குடியை சேர்ந்த வெங்கடேசன் உள்பட 4 பேர் காயமடைந்தனர். வெங்கடேசன் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டியில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர் களுக்கும் கட்டில், பீரோ, சலவை எந்திரம் உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்