காதல் கணவரை சேர்த்து வைக்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
காதல் கணவரை சேர்த்து வைக்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில் பள்ளபாளையத்தை சேர்ந்தவர் மாரப்பன். இவருடைய மகள் விஜயா (வயது 35). இவர் நேற்றுக்காலை கோரிக்கை மனு கொடுப்பதற்காக ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் ஒரு பையில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை திடீரென்று வெளியே எடுத்தார். உடனடியாக கேனில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீப்பெட்டியை எடுத்து பற்றவைக்க முயன்றார்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். அவரிடம் இருந்த தீப்பெட்டியை போலீசார் பிடுங்க முயன்றனர். ஆனால் விஜயா தீப்பெட்டியை விடாமல் இறுக்கமாக பிடித்து கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்த தீப்பெட்டியை போலீசார் வலுக்கட்டாயமாக பிடுங்கினார்கள். பின்னர் அவரை ஆட்டோவில் ஏற்றி சூரம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
காதல் திருமணம்இதுதொடர்பாக விஜயாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விஜயாவுக்கும், காஞ்சிக்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
கடந்த ஏப்ரல் மாதம் விஜயா தனது காதலனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த சில நாட்களாக விஜயாவின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்து வந்ததாக தெரிகிறது. இதனால் தனது காதல் கணவரை சேர்த்து வைக்கக்கோரி விஜயா கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் விசாரணைஇந்தநிலையில் தான் போலீசார் உரிய விசாரணை நடத்தி தனது காதல் கணவரை சேர்த்து வைக்கக்கோரி விஜயா தீக்குளிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சூரம்பட்டி போலீசார், விஜயாவை ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு விஜயாவிடம் மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காதல் கணவரை சேர்த்து வைக்கக்கோரி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.