ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள அணைகளில் சுற்றுலா படகு இயக்க நடவடிக்கை

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள அணைகளில் சுற்றுலா படகுகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2017-05-27 22:15 GMT

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:–

சுருளி அருவியில் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். அங்கு பேட்டரி கார்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

சோத்துப்பாறை அணையை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளிப்பது, சோத்துப்பாறையில் இருந்து மதகுகள் வழியாக வெளியேறும் நீரில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 2 தடுப்பணைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலா படகு

வைகை அணையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்கா அமைப்பது தொடர்பாக திட்டமிட்ட கருத்து தயார் செய்து தமிழக அரசுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும். மேகமலை, ஹைவேவிஸ், டாப்ஸ்டேசன் மற்றும் கொழுக்குமலை பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகின்றதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள அணைகளில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோம்பை திருமலைராயப்பெருமாள் கோவிலில் இருந்து ராமக்கல்மெட்டு வரை சாலை வசதி ஏற்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை அமைக்கவும், இப்பகுதிகளில் மலையேற்ற பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் மருதுபாண்டி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜெயலட்சுமி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அபிதா ஹனீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்