மத்திய அரசின் நெருக்கடிகளுக்கு வளைந்து கொடுக்கவில்லை நாராயணசாமி பேச்சு

மத்திய அரசு பல நெருக்கடிகளை கொடுத்தாலும் நாங்கள் வளைந்து கொடுக்கவில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

Update: 2017-05-26 22:04 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் பேசியதை தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பதில் அளித்து பேசியதாவது:-

வளைந்து கொடுக்கவில்லை

கவர்னர் உரை என்பது கடந்த காலத்தில் அரசின் செயல்பாட்டையும், எதிர்காலத்தில் செயல்படுத்தப்போகும் திட்டங்களையும் கோடிட்டு காட்டும் உரைதான். அதில் அனைத்து திட்டங்களையும் குறிப்பிட முடியாது. எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள் மீது துறைவாரியாக விவாதிக்கும்போது அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.

புதுவையை பொறுத்தவரை அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெறும் வகையில் எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் மத்திய அரசு 70 சதவீத நிதியை மானியமாக அளித்தது. ஆனால் அது தற்போது 30 சதவீதமாக குறைந்துவிட்டது. இதனால் நாம் அதிக வருமானத்தை தேடவேண்டியுள்ளது. மத்திய அரசு பல நெருக்கடிகளை கொடுத்தாலும் நாங்கள் வளைந்து கொடுக்கவில்லை.

நிதி ஆயோக் கூட்டத்தில் புதுவை மாநிலத்தின் பிரச்சினைகளை நான் முன்வைத்தேன். புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், சட்டமன்றமும் உள்ளது. மத்திய அரசின் சில துறைகள் புதுச்சேரியை மாநிலமாகவும், சில துறைகள் யூனியன் பிரதேசமாகவும் கருதுகின்றன. சில துறைகள் புதுச்சேரிக்கு 100 சதவீத மானியம் தரவேண்டும் என்கின்றன.

நிதிக்குழுவில் சேர்ப்பதில் தாமதம்

நிதி ஆயோக் 100 சதவீத மானியம் தரக்கூடாது என்கிறது என்று பிரதமரிடம் தெரிவித்தேன். எனவே புதுச்சேரியை மத்திய நிதிக்குழுவில் சேர்க்கவேண்டும். அப்படி சேர்த்தால்தான் 42 சதவீத மானியம் கிடைக்கும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினேன். புதுவையில் தனிக் கணக்கு தொடங்குவதற்கு முன்பு இருந்த ரூ.3,400 கோடி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன்.

இப்போது மத்திய அரசிடமிருந்து 27 சதவீத மானியம்தான் கிடைக்கிறது. புதுவையை மத்திய நிதிக்குழுவில் சேர்க்க அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் செய்ய காலதாமதமாகும். எனவே அதுவரை புதுச்சேரிக்கு 10 முதல் 15 சதவீத நிதியை உயர்த்தித்தர பிரதமரிடம் கோரியுள்ளேன். பிரதமரும் அதுகுறித்து பரி சீலிப்பதாக கூறினார்.

புதுவையில் இதற்கு மேல் வரிபோட முடியாது. எனவே மத்திய அரசு வழங்கும் கொடையை உயர்த்தித்தர வேண்டும் என்று கேட்டுள்ளேன். புதிய தொழிற்சாலைகளுக்கு நிலத்தை விற்கும் அதிகாரமும் நமக்கு உள்ளது. இருந்தபோதிலும் வெளிப்படைத்தன்மையோடு நிலத்தை கொடுக்க அதிகாரம் வழங்க பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாகவும் பேசியுள்ளேன்.

விவசாய கடன் தள்ளுபடி

புதுவை மாநிலத்தில் 3 விஷயங்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம். அதாவது 20 கிலோ இலவச அரிசி, முதியோர் உதவித்தொகை, சென்டாக் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் வழங்குவது ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் இருந்து பின்வாங்கமாட்டோம். புதுவையில் இந்த ஆட்சி வந்தபோது சோதனையான நிலைமை ஏற்பட்டது. பணமதிப்பிழப்பு, மதுக்கடைகள் மூடல், பத்திரப்பதிவு பாதிப்பு ஆகியவற்றால் வருமான இழப்பு ஏற்பட்டது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதால் ரூ.500 கோடி கூடுதல் செலவானது.

புதுவையில் வறட்சி பாதித்த பகுதிகளை மத்தியக்குழு பார்வையிட்டு சென்றுள்ளது. இதற்கு மத்திய அரசு நிதிதரும் என்ற நம்பிக்கை உள்ளது. விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வது தொடர்பாக முடிவு செய்து கவர்னருக்கு கோப்பு அனுப்பியுள்ளோம். அவர் சில விளக்கங்களை கேட்டிருந்தார். இதுதொடர்பாக நல்ல முடிவு வரும்.

இலவச மின்சாரம்

இங்கு பேசிய எம்.எல்.ஏ.க்கள் சிலர் இந்த அரசு ஒன்றும் செய்யவில்லை என்றனர். நாங்கள் வந்தபிறகு தான் 20 வருட கோரிக்கையான விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தோம். 100 யூனிட் வரை இலவச மின்சார திட்டத்தை நிறைவேற்றினோம். விவசாய பயிர் காப்பீடு திட்டம் கொண்டுவந்தோம். மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கினோம். சரக்குகளை கையாள சென்னை துறைமுகத்தோடு ஒப்பந்தம் செய்துள்ளோம். புதுவையில் இருந்து ஐதராபாத்துக்கும், சேலம் வழியாக பெங்களூருக்கும் விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன.

புதுவை நகரத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் புதிய தொழிற்கொள்கையை அறிவித்தோம். இதனால் தொழிற்சாலைகள் தொடங்க பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

உள்ளாட்சி தேர்தலை நடத்தவும் தயாராக உள்ளோம். ஆனால் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் தடை உத்தரவு உள்ளது. மத்திய அரசும் பிற்படுத்தப்பட்டோர் குறித்த விவரங்களை மாநில அரசுக்கு இன்னும் வழங்கவில்லை.

குறைவில்லை

சுற்றுலாத் துறையில் சேவை வரி மூலம் இனி 50 சதவீத நிதி புதுச்சேரிக்கு கிடைக்கும். இந்த ஆண்டு முதல் ஏற்கனவே வாங்கிய கடனுக்கு ரூ.500 கோடி வீதம் கட்டவேண்டியுள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தியதால் மேலும் ரூ.500 கோடி தேவைப்படுகிறது. இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு நிதி கேட்டுள்ளோம். இந்தநிலையிலும் மக்கள் நல்வாழ்வு திட்டங்களை எந்த குறையும் இல்லாமல் செயல்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். 

மேலும் செய்திகள்