கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலக பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்தின் மாவட்ட தலைவர் கிரிதரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், மனோகரன், தமிழ்நாடு பால்வளத்துறை அலுவலர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு 2003–ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த ஓய்வூதியத்தை அமல்படுத்தி புதிய பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்தவேண்டும், தமிழக அரசின் தலைமைச்செயலகம் உள்பட அனைத்து துறைகளிலும் அனைத்து நிலை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் பிரகாஷ் நன்றி கூறினார்.