மதுக்கடையை திறக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

செம்பனார்கோவில் அருகே மதுக்கடையை மூடக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் கிராம மக்கள் மதுக்கடையை திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-05-17 23:00 GMT
செம்பனார்கோவில்,

செம்பனார்கோவில் அருகே குரங்குபுத்தூர் கிராமத்தில் நெடுஞ்சாலையோரம் இருந்த மதுக்கடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மூடப்பட்டது. இந்த கடை நேற்று முன்தினம் குரங்குபுத்தூர் காவிரி ஆற்றங்கரையோரம் மீண்டும் திறக்கப்பட்டது. அந்த மதுக்கடையை மூடக்கோரி நேற்று பா.ம.க. மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் மதுக்கடைக்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த அந்தபகுதி கிராமமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை கண்டித்தும், மதுக்கடையை திறக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கருணாகரன் மற்றும் செம்பனார்கோவில் போலீசார் மேற்கண்ட இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்