பேரிகை பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன
சூளகிரி, பேரிகை பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததில் வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாக காலையில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் சூளகிரியில் கடந்த 2 நாட்களாக சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவும் சூளகிரி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதே போல பேரிகை பகுதியிலும் சூறைக்காற்றுடனும், பலத்த இடி, மின்னலுடனும் மழை பெய்தது.
மேற்கூரைகள் பறந்தனஇதன் காரணமாக அந்த பகுதியில் விவசாய நிலத்தில் இருந்த பசுமைக்குடில்கள் காற்றில் சரிந்தன. மேலும் விவசாய பயிர்களும் சேதமடைந்தன. பேரிகை அருகே சூளகுண்டா கிராமத்தில் சூறைக்காற்றுடன், கனமழை பெய்ததில், 10–க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன.
ஓடுகள் சரிந்து கீழே விழுந்து நொறுங்கின. இதன் காரணமாக வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்தனர். சூறைக்காற்று வேகமாக வீசியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இந்த பலத்த மழைக்கு ஆங்காங்கே மரங்களும் சாய்ந்து விழுந்தன.