ஆதிதிராவிடர் நலக்கல்லூரி மாணவிகளுக்கான விடுதிக் கட்டிடம், எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ஆதிதிராவிடர் நலக்கல்லூரி மாணவிகளுக்கான விடுதிக் கட்டிடம் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்

Update: 2017-05-17 22:30 GMT
சென்னை

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ஆதிதிராவிடர் நலக்கல்லூரி மாணவிகளுக்கான கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நலத்திட்டங்கள்

அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனக் குழந்தைகளும் இடைநிற்றல் இன்றி கல்வி கற்று, சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், அவர்களுக்கு கட்டணமில்லா கல்வி, மதிய உணவு, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா கல்வி உபகரணங்கள் மற்றும் சீருடை, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கற்பிப்பு கட்டணம் செலுத்துதல், ஊக்கத் தொகை வழங்குதல், தங்கிப் பயிலும் விடுதிகள் கட்டுதல் போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

விடுதிக் கட்டிடம்

அந்த வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் 3476 சதுர அடி பரப்பளவில், 50 மாணவிகள் தங்கும் வசதியுடன் 84 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலக்கல்லூரி மாணவியருக்கான விடுதிக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், திறந்துவைத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்