ஊட்டியில் சர்வதேச புகழ்பெற்ற மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது

ஊட்டியில் சர்வதேச புகழ்பெற்ற மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது கொய்மலர்களால் மாமல்லபுரம் கோவில் சிற்பம் அமைக்கும் பணி தீவிரம்

Update: 2017-05-17 21:30 GMT
நீலகிரி

ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. நூற்றாண்டுகளை கடந்தும் நடத்தப்படும் இந்த மலர் கண்காட்சி சர்வதேச அளவில் புகழ்பெற்றது. இந்த ஆண்டு 121–வது மலர்கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 21–ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இந்த மலர் கண்காட்சியை தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

இதில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வேளாண்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

மாமல்லபுரம் கோவில் சிற்பம்


இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு மாமல்லபுரம் கோவில் சிற்பம் அமைக்கப்படுகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுதவிர 15 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர்ந்துள்ள மலர்செடிகள் பூங்காவில் உள்ள மலர் மாடத்தில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் பூந்தொட்டி மலர் செடிகளை கொண்டு நட்சத்திரம், வளையங்கள் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அரங்குகள்


இந்த அண்டு ராஜ்பவன், ராணுவ கல்லூரி மற்றும் தனியார் அரங்குகளும் அமைக்கப்படுகிறது. பூங்காவில் உள்ள மைதானத்தில் விழா மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. மலர்கண்காட்சியை முன்னிட்டு 3 நாட்கள் இங்கு பல்வேறு மாநிலங்களின் கலாச்சார நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

மலர்கண்காட்சியை முன்னிட்டு பூங்காவில் உள்ள நிழற்குடைகள், மலர் மாடங்கள், நுழைவு வாயில் ஆகியவை வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொழிவுடன் காட்சி அளிக்கிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வண்ண மலர்களை கொண்டு நுழைவு வாயிலும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்