சிவன் கோவிலில் புகுந்து உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

குளச்சல் அருகே சிவன் கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை தூக்கிச் சென்றனர். கடந்த 5 மாதங்களுக்குள் 2–வது முறையாக இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளது.

Update: 2017-05-16 23:00 GMT
குளச்சல்,

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வெள்ளியாக்குளம் பத்தரை பகுதியில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறும். சுற்றுவட்டார மக்கள் சாமியை வழிபட்டு செல்வார்கள். கோவில் முன்பு உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்த பின்பு பூசாரி கோபாலகிருஷ்ணன் கோவிலை பூட்டிச் சென்றார்.

உண்டியல் கொள்ளை

நேற்று அதிகாலையில் அவர் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கிரில் கேட்  திறந்து கிடந்தது. அதை அடுத்து இருந்த கதவும் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி, இது பற்றி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார்.

கோவிலுக்கு அவர்கள் வந்து பார்த்த போது, உண்டியல் மாயமானது             தெரியவந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கொள்ளையர்கள் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த உண்டியலை தூக்கிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகிகள் குளச்சல் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

2–வது முறையாக

மேலும் கோவிலில் கொள்ளையர்களின் கைரேகை பதிவாகி உள்ளதா? என்றும் சோதனை நடத்தினர். இதற்காக தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் அந்த கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். ஆனால் தற்போது உண்டியலையே தூக்கி சென்றுவிட்டனர். ஒரே கோவிலில் 5 மாதங்களுக்குள் 2–வது முறையாக இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்