சின்னாளபட்டியில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சின்னாளபட்டியில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-05-16 22:30 GMT
திண்டுக்கல்

சின்னாளபட்டியில் கிறிஸ்தவ ஆலயம் அருகில் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. குடியிருப்பு மிகுந்த இந்த பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பேரூராட்சி கூட்டத்தில் 9 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் மதுக்கடை மூடப்படவில்லை என்று தெரிகிறது. குடிமகன்களின் தொல்லையால் அந்த வழியாக நடந்து செல்ல முடியவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பல பகுதிகளில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் இந்த மதுக்கடையில் மதுப்பிரியர்கள் குவிந்து வருகின்றனர்.

சாலை மறியல்


இதனால் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. போதை தலைக்கேறியதும் அவர்கள் தகராறில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே, மதுக்கடையை மூடக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊர்வலமாக சென்று முற்றுகையிட முயன்றனர். அப்போது மதுக்கடையை மூடக்கோரி கையில் பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மதுக்கடை முன்பு பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சின்னாளபட்டி– செம்பட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு


பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட கலெக்டரிடம் எடுத்துரைக்கப்பட்டு மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போராட்டம் காரணமாக அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்