கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை

கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-05-15 23:00 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. அங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பேரூராட்சி பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே அதிக நாட்கள் இடைவெளியில் குடிநீர் வினியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

முற்றுகை போராட்டம்

இந்நிலையில் நேற்று காலை கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட 11–வது வார்டு பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் தங்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோ‌ஷங்களையும் எழுப்பினர்.

அவர்களிடம் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சீராகவும், போதிய அளவிலும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்