வெள்ளியணை மாரியம்மன் கோவில் தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

வெள்ளியணை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Update: 2017-05-15 22:30 GMT
வெள்ளியணை,

கரூர் மாவட்டம் வெள்ளியணையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை உற்சவ திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவில் அன்னவாகனம், சிம்மவாகனம் என உற்சவ நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன. நேற்று முன்தினம் காலை பக்தர்கள் பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து வருதலும், இரவு பூச்சொரிதலும், வாணவேடிக்கையும் நடைபெற்றது.

தேரோட்டம்

நேற்று காலை பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் பொருட்டு அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் மாரியம்மனை வழிபட்டனர். தொடர்ந்து மாலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் வைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவினை முன்னிட்டு இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்