மின் இணைப்பு கேட்டு ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

பிரிவு–17 நிலத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் மின் இணைப்பு கேட்டு ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-05-15 22:00 GMT
நீலகிரி

 கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் வருவாய் மற்றும் வனத்துறைக்கு என ஒதுக்காத பிரிவு–17 வகை நிலம் உள்ளது. இவ்வகை நிலத்தில் அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் வருவாய், வனம், காவல் துறையினர் இணைந்து பிரிவு–17 நிலத்தை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இதனால் பிரிவு–17 நிலத்தில் குடியிருக்கும் மக்களுக்கு அடிப்படை வளர்ச்சி பணிகள் செய்யப்பட வில்லை. குறிப்பாக மின்சாரம், சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட வில்லை. இதனால் பல்வேறு பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

 இந்த நிலையில் பிரிவு–17 நிலத்தில் குடியிருக்கும் மக்களுக்கு மின்இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் 24–ந் தேதி கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் பிரிவு–17 நிலத்தில் குடியிருக்கும் மக்கள் மின் இணைப்பு கேட்டு மனு மற்றும் விண்ணப்பங்கள் அளித்தனர். பின்னர் 2, 3–வது கட்டங்களாக கடந்த 3, 13–ந் தேதிகளில் மனுக்கள் அளிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர்.

காத்திருப்பு போராட்டம் நடத்திய மக்கள்

 இந்த மனுக்கள் மற்றும் விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வில்லை எனில் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்க வில்லை. இருப்பினும் தடையை மீறி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பிரிவு–17 நிலத்தில் குடியிருக்கும் மக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் மின் இணைப்பு கேட்டு அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார்.

 மாநில பொதுச்செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் வாசு, பாஸ்கரன், முருகன், மணி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்.டி.ஓ. தினகரனை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு வலியுறுத்தினர். அப்போது பிரிவு–17 நிலம் சம்பந்தமான உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. 90 சதவீத விசாரணை முடிந்து விட்டது. இதனால் விரைவில் நிலப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும். ஆனால் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி பட்டா நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தடையில்லா சான்று வழங்குவதாக உறுதி அளித்தார்.

முதல் – அமைச்சரை சந்திக்க ஏற்பாடு

 இதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஏற்று கொள்ள வில்லை. இதனால் ஆர்.டி.ஓ.வுடன் பேச்சுவார்த்தையை முடித்து கொண்டனர். தொடர்ந்து அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் 2–வது கட்ட பேச்சுவார்த்தை ஆர்.டி.ஓ. தினகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசங்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது ஆர்.டி.ஓ. தினகரன் கூறுகையில், வருகிற 19–ந் தேதி ஊட்டிக்கு தமிழக முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகிறார்.

 அப்போது மாவட்ட கலெக்டர் மூலமாக தமிழக முதல்– அமைச்சரிடம் மனுக்கள் அளிக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் பிரிவு–17 நிலத்தில் குடியிருப்பவர்களை தவிர பிற வகை நிலங்களில் குடியிருக்கும் அனைத்து மக்களுக்கும் மின் இணைப்பு வழங்குவதற்கான தடையில்லா சான்று வழங்குவதாக உறுதி அளித்தார். பிரிவு–17 நிலத்தில் மின் இணைப்பு வழங்க என்னிடம் அதிகாரம் இல்லை என்று கூறினார்.

எந்த வகையில் நியாயம்? மக்கள் ஆதங்கம்

இதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஏற்று கொண்டு தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். பின்னர் ஆர்.டி.ஓ. தினகரன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடமும் தமிழக முதல்– அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். இதையொட்டி பகல் 3.30மணிக்கு போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் பொக்லின் எந்திரம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. விவசாய நிலங்களில் மண் நிரப்பப்பட்டு அழிக்கப்படுகிறது. ஆனால் பிரிவு–17, 53 மற்றும் அரசு நிலங்களில் இருப்பவர்களுக்கு மட்டும் ஆதார், ரேசன் கார்டுகள், குடிநீர், வீட்டு கதவு எண் வழங்கப்படுகிறது. ஆனால் மின் இணைப்பு மட்டும் வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்?. இவ்வாறு அவர்கள் ஆதங்கத்துடன் கூறினர்.

மேலும் செய்திகள்