திருமங்கலம் - நேரு பூங்கா இடையே சுரங்க மெட்ரோ ரெயிலில் பயணிகள் கூட்டம் இல்லை

புதிதாக திறக்கப்பட்ட திருமங்கலம் - நேரு பூங்கா இடையேயான சுரங்க மெட்ரோ ரெயிலில் பயணிகள் கூட்டம் இன்றி, 2-வது நாளிலேயே வெறிச்சோடியது.

Update: 2017-05-15 23:15 GMT
சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆகியோர் திருமங்கலம்-நேரு பூங்கா இடையேயான சுரங்க மெட்ரோ ரயில் சேவையை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தனர். திருமங்கலம், நேரு பூங்கா மெட்ரோ ரெயில் நிலையங்களையும் சேர்த்து சுரங்க வழித்தடத்தில் அண்ணா நகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, செனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி மற்றும் கீழ்ப்பாக்கம் ஆகிய 7 மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன.

7.4 கி.மீ தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் 3 மாதங்களுக்கு செல்போன்களுக்கு சிக்னல் கிடைக்காது. இந்த கால இடைவெளிக்குள் செல்போன்களுக்கு டவர் கிடைக்கச்செய்யும் வகையில் தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. திருமங்கலத்தில் இருந்து நேரு பூங்கா வரை செல்வதற்கு கட்டணமாக ரூ.40 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் சேவைக்கான கட்டணம் சற்று அதிகம் என்று பயணிகள் கருத்து தெரிவித்தனர்.

அனுபவம் புதிது

சுரங்கப்பாதை வழித்தடத்தில் சீரான இடைவெளியில் அவசர வழிகள் உள்ளன. மேலும் அவசர சமயத்தில் நடந்து செல்ல நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்போடு பல்வேறு பகுதிகளில் இருந்து சுரங்க மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய பொதுமக்கள் குடும்பத்தோடு வந்து குவிந்தனர். சென்னையில் சுரங்க மெட்ரோ ரெயில் பயண அனுபவம் புதிது என்பதால் பொதுமக்களும் உற்சாகம் அடைந்தனர்.

மெட்ரோ ரெயில் சேவையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தினால், சாலை மார்க்கமாக நிலவும் போக்குவரத்து நெரிசல் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். சுரங்க மெட்ரோ ரெயில் சேவையை பொதுமக்கள் அனுபவித்து மகிழும் வகையில் முதல் நாளன்று பிற்பகல் 2 மணி வரையிலும் இலவச பயணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் பயணிகளின் கூட்டம் மெட்ரோ ரெயில்களில் அலைமோதியது.

கூட்டம் இல்லை

பயண கட்டணத்தில் 40 சதவீத தள்ளுபடி அறிவித்து, சேவையை தொடங்கியதும் சுரங்க மெட்ரோ ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துகொண்டே சென்றது. சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கிய 2-வது நாளான நேற்று பயணிகளின் கூட்டம் அலைமோதும் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய வந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தின் காரணமாக பஸ்கள் வழக்கம்போல் இயங்காத போதிலும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சுரங்க மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் இல்லை. மிக குறைவான பயணிகளை சுமந்துகொண்டு, மெட்ரோ ரெயில்கள் பயணத்தை தொடர்ந்தன. குழந்தைகளை அழைத்துக்கொண்டும், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என குறைவானவர்களே பயணம் செய்தனர்.

வெறிச்சோடியது

பயணிகளின் வரவு குறைந்ததால் சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்கள் திறக்கப்பட்ட 2-வது நாளிலேயே கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சுரங்கப்பாதை வழித்தடத்தில் ரூ.100 செலுத்தி பயண அட்டை பெற்ற பின்னரே பயணிகள் பயணத்தை தொடர முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் பயணம் செய்ய ஆர்வத்தோடு வந்து, கட்டணத்தை கேட்டதும் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதையும் காணமுடிகிறது.

இதுகுறித்து பாடி பகுதியை சேர்ந்த பிரியா கூறுகையில், “கோடை விடுமுறைக்கு குழந்தைகள் வெளியூர் அழைத்துச்செல்லும்படி கூறினார்கள். நான் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம் என்று கூறி அழைத்து வந்தேன். ஆனால் ஒரு நபருக்கு ரூ.100 செலுத்தி பயண அட்டை வாங்கும்படி சொல்கிறார்கள். நாங்கள் 4 பேர் வந்தோம். ஒரு நபருக்கு ரூ.100 என்றால் ரூ.400 செலுத்தி பயணம் செய்வதை விட வீட்டுக்கு சென்றுவிடலாம் என்று பயணத்தை தவிர்த்துவிட்டோம்” என்றார். 

மேலும் செய்திகள்