தாம்பரம் அருகே மூடப்பட்ட மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டதால் தீவைப்பு; 60 பேர் கைது

தாம்பரம் அருகே மூடப்பட்ட மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மதுக்கடைக்கு தீவைக்கப்பட்டது. இதுதொடர்பாக 15 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-05-15 22:15 GMT
சென்னை

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. வேறு பகுதிகளில் அந்த மதுக் கடைகளை திறக்க அரசு முயற்சிப்பதற்கு மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்க கூடாது என கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாம்பரம் அருகே கிஷ்கிந்தா செல்லும் சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் நகரில் ஒரு மதுக்கடை இருந்தது. இந்த கடை நெடுஞ்சாலையில் இருந்து 490 மீட்டருக்குள் இருந்ததால் கோர்ட்டு உத்தரவின்படி மூடப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பு அந்த மதுக்கடை நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டருக்கு மேல் இருப்பதாக கூறி திறக்கப்பட்டது.

சாலை மறியல்

இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடையை அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் உள்பட வருவாய் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த மதுக்கடை அகற்றப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள், அன்னை அஞ்சுகம் நகர் பகுதி பெண்கள், பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் மதுக்கடை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடைக்கு தீவைப்பு

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மதுக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த மேற்பார்வையாளர் ஜெயக்குமார், விற்பனையாளர்கள் மகேந்திரன், சுரேஷ் ஆகியோரை வெளியே விரட்டினார்கள். அங்கிருந்த பணப்பெட்டிகளையும் சிலர் தூக்கி எறிந்தனர். பாரில் இருந்த மது அருந்த வந்தவர்களையும் விரட்டியதில் அவர்களும் அங்கிருந்து ஓடினார்கள்.

கடையில் இருந்த மது பாட்டில்களை சாலையில் போட்டு உடைத்தனர். மதுக்கடைக்கு சிலர் தீவைத்தனர். இதில் கடை தீப்பிடித்து பயங்கரமாக எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சேலையூர் போலீஸ் உதவி கமிஷனர் பழனிசெல்வம், தாம்பரம் உதவி கமிஷனர் லோகநாதன், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்தனர்.

ரூ.20 லட்சம் சேதம்

தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கடையில் இருந்த மதுபானங்கள் எரிந்து நாசமானது. இதில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் எரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வன்னியரசு, 15 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி வன்னியரசு கூறும்போது, “சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதும் மூடப்பட்ட மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டதால் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த கடையால் இங்குள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த பகுதியில் மதுக்கடையை திறக்கக்கூடாது. மீண்டும் திறக்க முயற்சி மேற்கொண்டால் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம்” என்றார். 

மேலும் செய்திகள்