போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது

அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் ஓடாத நிலையில் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

Update: 2017-05-15 19:54 GMT
விருதுநகர்,

அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 13–வது ஊதியக்குழு அமைக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன்களை முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். போக்குவரத்துததுறை அமைச்சருடன் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று முதல் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

65 சதவீதம்

வேலை நிறுத்தம் நேற்று முதல் தொடங்கப்பட்டாலும் கூட நேற்று முன் தினம் மாலையே 20 சதவீத அரசு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன. நேற்று காலை 5.30 வரை போக்குவரத்துக்கழக பஸ்கள் இயக்கப்படவில்லை. காலை 5.30 மணிக்கு மேல் படிப்படியாக இயக்கப்பட்டன. எனினும் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை.

அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள் பணிக்கு வந்திருந்தனர். அவர்களுடன் ஒப்பந்த தொழிலாளர்களும் பணியமர்த்தப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 65 சதவீத போக்குவரத்துக்கழக பஸ்கள் இயக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று மதியம் வரை வழக்கமாக 390 பஸ்கள் இயக்கப்பட வேண்டிய நிலையில் 265 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மொத்தமுள்ள 2 ஆயிரத்து 662 தொழிலாளர்களில் 985 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாகவும் போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்று அதிகாலை முதலே பல்வேறு வழித்தடங்களில் தனியார் பஸ்களும், தனியார் மினி பஸ்களும் இயக்கப்பட்டன.

பிரச்சினை

பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாக இருந்த போதிலும் சில கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை என கிராம மக்கள் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பிரச்சினை செய்தனர். போலீசார் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டனர். பஸ் நிலையத்திலும், முக்கிய பஸ் நிறுத்தங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இயக்கப்பட்ட பஸ்களில் அதிக பட்சமாக 10 பயணிகளே பயணம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அரசு பஸ்களை விட தனியார் பஸ்களே அதிக அளவில் உள்ளதால் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாவிட்டாலும் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனாலும் தனியார் பஸ்களிலும் மினி பஸ்களிலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
வெம்பக்கோட்டை, ஆலங்குளம் பகுதிகளில் கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பஸ்கள் மூலமாக கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் நேற்று வேலைக்கு செல்லவில்லை. பஸ்களுக்கு காத்திருந்த பயணிகள், ஷேர் ஆட்டோகளில் பலர் பயணம் செய்தார்கள்


சாத்தூர்

சாத்தூர் அரசுபோக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து 40 டவுன் பஸ்களும் 25 புற நகர் பஸ்களும் இயக்கப்பட்டு வந்த நிலையில் இவற்றில் நேற்று காலை 8 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அதுவும் பிற்பகலில் 5 ஆக குறைந்து போனது. ஒப்பந்த தொழிலாளர்களைக்கொண்டே இந்த பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ்களும் கிராமங்களுக்கு செல்லும் தனியார் மினி பஸ்களும் ஓடினாலும் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.

அருப்புக்கோட்டை பகுதிகளில் ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டன. பெரும்பாலானபஸ்கள் ஓடின. இங்கும் கூட்டம் குறைவாகவே இருந்தது.

மேலும் செய்திகள்