காரிமங்கலம் அருகே பரபரப்பு: மோட்டார் சைக்கிள்கள் மோதி தீப்பிடித்தது விவசாயி உள்பட 2 பேர் படுகாயம்

காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிகொண்ட விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது.

Update: 2017-05-15 19:25 GMT
காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் தும்பலஅள்ளியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 41), விவசாயி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் நாகனம்பட்டி அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு டீசல் வாங்க சென்றார். அங்கு ஒரு கேனில் டீசல் வாங்கி மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் வைத்து கொண்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டார். அவர் கிருஷ்ணகிரி–தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தங்கவேல் உள்பட 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மற்றொரு மோட்டார் சைக்கிளுக்கும் பரவியது.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மோட்டார் சைக்கிள்களில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தங்கவேல் மோட்டார் சைக்கிளில் டீசல் கேன் இருந்ததால் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பொதுமக்களால் தீயை அணைக்க முடியவில்லை. மற்றொரு மோட்டார் சைக்கிளில் பிடித்த தீயை பொதுமக்கள் அணைத்தனர். இந்த தீவிபத்தில் தங்கவேல் மோட்டார் சைக்கிள் எரிந்து சேதமடைந்தது.

பின்னர் பொதுமக்கள் விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தர்மபுரி நோக்கி வந்து தங்கவேல் மீது மோதிய நபர் இன்னும் மயக்க நிலையிலே இருப்பதால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்