போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 123 பஸ்களே இயக்கப்பட்டதால் பயணிகள் பாதிப்பு தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக மாவட்டத்தில் 123 பஸ்களே இயக்கப்பட்டன.

Update: 2017-05-15 23:00 GMT
ராமநாதபுரம்,

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்தின் தொழிற்சங்கத்தினர் 13–வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும், ஓய்வூதிய நிலுவை தொகையை வழங்க உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததன் எதிரொலியாக நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து முடங்கியது. அதிகஅளவில் செல்லக்கூடிய மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கான பஸ்கள் இயங்காததால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. பயணிகள் பஸ்சுக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிந்தது பார்க்க பரிதாபமாக இருந்தது. பல்வேறு தொழிற்சங்கங்கள் பஸ்களை இயக்கமாட்டோம் என்று அறிவித்திருந்தபோதிலும் அண்ணா தொழிற்சங்கத்தினர் பஸ்கள் வழக்கம்போல் ஓடும் என்று நோட்டீசு ஒட்டி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி இருந்தனர்.

பிரசாரம்

ஆனால், சொன்னபடி அண்ணா தொழிற்சங்கத்தினர் முழுமையாக பஸ்களை இயக்க வரவில்லை. இதன்காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து முடங்கியது. இந்த அசாதாரண சூழ்நிலையில் தனியார் பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டாலும் அதிகஅளவில் கட்டணம் வசூலித்ததாக பயணிகள் புகார் தெரிவித்தனர். இதுதவிர, ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் வந்திருந்த ஒருசில பஸ்களில் பயணிகள் போட்டிபோட்டு ஏறினர். அப்போது அந்த பஸ்சிற்குள் சென்ற வேலைநிறுத்த போராட்டக்காரர்கள் ஒருசிலர் உரிய அனுபவம் இல்லாத டிரைவர்களை வைத்து பஸ்கள் இயக்கப்படுவதால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று அவதூறு பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் பயணிகள் சிலர் பஸ்சில் இருந்து இறங்கினர். இதுபற்றி அறிந்த ராமநாதபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சர்வேஷ்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பெரும்பாலான பஸ் போக்குவரத்து முடங்கியதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் அரசு போக்குவரத்து பணிமனைக்கு வந்து அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேசி பணியாளர்களை வரவழைத்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தார்.

123 பஸ்கள்

இதன்பயனாக ஒரு சில பஸ்கள் பஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பஸ்களில் பயணிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏறி சென்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரத்தில் நகர் மற்றும் புறநகர் பணிமனைகளும், பரமக்குடி, கமுதி, ராமேசுவரம், முதுகுளத்தூர் பணிமனைகளும் உள்ளன. இங்கிருந்து வழக்கமாக நாள் ஒன்றுக்கு 361 பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். போக்குவரத்து ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக நேற்று நகர், புறநநகர் பஸ்கள் என 123 பஸ்கள் இயக்கப்பட்டன. வேலை நிறுத்தம் காரணமாக அந்த பஸ்களிலும் கூட்டமின்றி காணப்பட்டது.

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பரமக்குடி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி மற்றும் நிர்வாகிகள் பஸ் பணிமனைக்கு சென்று பஸ்களை இயக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தவிர மற்ற தொழிற்சங்கத்தினர் பஸ்களை இயக்க மறுத்துவிட்டனர். மேலும் இயக்கப்படும் ஒரு சில பஸ்களையும் நிறுத்தும்படி தொழிற்சங்கத்தினர் ஆங்காங்கே வற்புறுத்தியதால் போலீசார் அந்த பகுதிகளுக்கு சென்று தொழிற்சங்கத்தினரை அப்புறப்படுத்தினர்.

இருமடங்கு கட்டணம்

போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினரின் இந்த வேலைநிறுத்தம் காரணமாக அரசு பஸ்களை இயக்குவதற்கு பள்ளி மற்றும் கல்லூரி பஸ் டிரைவர்களை வரவழைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்காரணமாக பஸ்கள் முக்கிய பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. முக்கிய பணிகளுக்காக செல்ல வேண்டியவர்கள் வேறுவழியின்றி தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து சென்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் வாகன டிரைவர்கள் மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு இருமடங்கு கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. பஸ்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஏராளமானோர் ரெயில்களை நாடிச்சென்றனர். இதன்காரணமாக ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.

மேலும் செய்திகள்