அ.தி.மு.க இரு அணிகளும் இணைய சில அமைச்சர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்

அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உடன்பாடு உண்டு. ஆனால் சில அமைச்சர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் பாண்டிய ராஜன் தெரிவித்தார்.

Update: 2017-05-14 22:52 GMT
செங்குன்றம்,

மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாத்தூர் எம்.எம்.டி.ஏ., மாதவரம் பஜார், புழல் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) சார்பில் நீர் மோர் பந்தல் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு நீர்மோர் பந்தல் களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிரிந்தது. இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது. தற்போது ஜெயலலிதாவின் கனவான தமிழக மக்களுக்கு நல்லாட்சியை தரவேண்டும் என்ற நோக்கத்தில் 2 அணிகளும் இணைய குழுக்களை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

உடன்பாடு உண்டு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 2 அணிகளும் இணைந்து ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற உடன்பாடு உள்ளது. ஆனால் அவருடன் உள்ள சில அமைச்சர்கள் 2 அணிகளும் இணைவதற்கு முட்டுக்கட்டைகளாக உள்ளனர்.

சசிகலாவும், தினகரனும் தொடர்ந்து கட்சி பதவியில் நீடித்தால் விரைவில் எடப்பாடி பழனிசாமி அரசு கவிழ்வது நிச்சயம். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளும் ஒருங்கிணைந்தால் மட்டுமே ஜெயலலிதாவின் உண்மையான கனவு நிறைவேற்றப்படும்.

முன்னுரிமை

வெளிநாட்டில் இருந்து தொழில் தொடங்க தமிழகத்துக்கு வரும் தொழில் அதிபர்களுக்கு முன்னுரிமை வழங்கி புதிய தொழிற்சாலையை அமைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாங்கள் ெ-்சயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்