ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் பிரசவத்திற்கு அனுமதி மறுப்பு

கொட்டாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கர்ப்பிணி பெண்களுக்கு, பிரசவம் பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறது.

Update: 2017-05-14 19:42 GMT
கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதை மையமாக கொண்டு, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இங்கு தினமும் 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தனியார் மருத்துவமனைகளில் அதிக பணம் செலவு செய்து சிகிச்சை பெற முடியாது என்பதால் தான், தமிழக அரசு கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்தது. அங்கு தனியார் மருத்துவ மனைகளுக்கு நிகராக சிகிச்சை, மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள், பிரசவ அறை, ஆயுர்வேத சிகிச்சை அறை, ஆம்புலன்ஸ் வசதி என்று பல்வேறு திட்டங்களை அதில் அரசு செயல்படுத்தி வருகிறது.

சமீப காலங்களில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெரும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. காரணம் மர்ம காய்ச்சல், சிக்கன்குனியா, வைரஸ் காய்ச்சல் போன்றவைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்படுவது தான். இந்தநிலையில் கொட்டாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், ஊழியர்கள் பற்றாக்குறையால் சிகிச்சைக்கு செல்லும் பொதுமக்களுக்கு தகுந்த சிகிச்சை கிடைப்பதில்லை. மேலும் ஊழியர்கள் நோயாளிகளை அலைகலைத்து, கடுமையான சொற்களால் பேசி வருகின்றனர்.

பற்றாக்குறை

மேலும் இங்கு போதிய தண்ணீர் வசதி இல்லாததால், பற்றக்குறை ஏற்பட்டு, தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இங்குள்ள ஆழ்துளை கிணறிலும் தண்ணீர் மட்டம் குறைந்துவிட்டதால், முழுவதுமாக தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட சிகிச்சைக்கு கூட தண்ணீர் வசதி இல்லை. இந்த மையத்தில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்கள், பிரசவத்திற்காக வரும் போது, தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால், பிரசவத்திற்கு அனுமதிக்க இயலாது என்று கூறி மேலூர், சிங்கம்புணரி, மதுரை போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அவசர காலங்களில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள், குடும்பத்தினரிடம் பிரசவத்திற்கு தண்ணீர் கொண்டு வரும்படி ஊழியர்கள் கூறுவதால் அவர்கள் பெரிதும் அவதிபடுகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து சிகிச்சைக்கு வருபவர்கள், அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ஊராட்சி நிர்வாகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

மேலும் செய்திகள்