உஷாரய்யா உஷாரு..

அந்த மாணவி கிராமத்தை சேர்ந்தவள். அதிக மதிப்பெண் பெற்று, ‘பிளஸ்-டூ’ தேறினாள்.

Update: 2017-05-14 10:35 GMT
பெரு நகரத்தில் உள்ள பிரபலமான என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து, ஆஸ்டலில் தங்கிப்படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவள் நினைத்தது போலவே பெரிய கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்தது.

அதே கல்லூரியில், அந்த மாணவியின் பக்கத்து கிராமத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார். அவர், அந்த கிராமத்து செல்வந்தரின் மகன். அந்த செல்வந்தரை பண்புள்ளவர் என்று அங்குள்ள மக்கள் குறிப்பிடுவார்கள்.

அந்த செல்வந்தரின் மகன் கிராமத்துக்கு வந்திருந்தபோது, மாணவியின் பெற்றோர், படிக்கப்போகும் தங்கள் மகளையும் அழைத்துக்கொண்டு அவனை சந்திக்க சென்றார்கள். மகளை, அந்த மாணவருக்கு அறிமுகம் செய்துவைத்து ‘கிராமத்திலே வளர்ந்தவள். நகரத்து கலாசாரம் தெரியாதவள். எப்படி அவளை தனியாக ஆஸ்டலில் தங்கிப்படிக்க அனுப்புவது என்று நாங்கள் தயங்கினோம். நீங்கள் அதே கல்லூரியில் படிப்பது எங்களுக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது. நகரத்தில் உள்ளவங்களோட எப்படி பழகணுங்கிற விவரத்தை எங்கள் மகளுக்கு சொல்லிக்கொடுத்து அவளை பொறுப்பாக பார்த்துக்கணும். உங்களை நம்பித்தான் அவளை அங்கே படிக்க அனுப்புறோம்’ என்றார்கள்.
அந்த மாணவரும், ‘கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கிறேன்’ என்று பொறுப்பாக பதில்கூறி அனுப்பிவைத்தார்.

அவள் கல்லூரியில் சேர்ந்தாள். ஆஸ்டலில் தங்கினாள். அந்த மாணவரும் பொறுப்பாக, அவ்வப்போது வந்து நலம் விசாரித்தார். அத்தியாவசிய தேவைகளுக்கு அவளுக்கு உதவியும் செய்துகொண்டிருந்தார். அவர் ஊருக்கு செல்லும்போதெல்லாம், அந்த மாணவியின் பெற்றோர் சென்று அவரை சந்திப்பார்கள். ஒவ்வொருமுறையும் ‘உங்களை நம்பித்தான், மகளை அங்கே படிக்க அனுப்பியிருக்கிறோம். நல்லது கெட்டதை அவளுக்கு சொல்லிக்கொடுங்கள்’ என்று அறிவுறுத்திக்கொண்டே இருந்தார்கள்.

தன்னை கண்மூடித்தனமாக அவர்கள் நம்பியது அந்த மாணவரின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இருவருமே ஆஸ்டலில் தங்கிப்படித்ததால், ‘போரடிக்குது.. வா.. வெளியே சென்று வரலாம்’ என்று அழைத்தான். அவளுக்கு அது பிடிக்கவில்லை. மறுப்பு தெரிவித்தாள். தனது நண்பர்களுக்கு அவளை அறிமுகப்படுத்திவைப்பதாக சொன்னான். அதையும் நிராகரித்தாள்.

அதை எல்லாம் கிராமத்தில் வசிக்கும் அவளது பெற்றோரிடம் குறையாக சொன்னார். ‘நான் சொல்வது எதையும் உங்கள் மகள் கேட்பதில்லை’ என்று குற்றஞ்சாட்டினார்.

அதை பற்றி அவர்கள் மகளிடம் விளக்கம் கேட்க அவள், ‘அவரது அணுகுமுறை அவ்வளவு சரியாக இல்லை. வெளியே அழைக்கிறார். அவரது நண்பர்களுக்கெல்லாம் அறிமுகம் செய்கிறேன் என்கிறார். அவர் சொல்கிறபடி கேட்டால் என் பெயர் கெட்டுப்போகும்’ என்றாள்.

அதை ஏற்றுக்கொள்ளாத அவளது பெற்றோர், ‘அவர் நல்ல குடும்பத்தில் பிறந்தவர். அவர் எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும். அவரை நீ சந்தேகப்படாதே. அவரை குறை கூறும் அளவுக்கு நீ பெரிய ஆள் இல்லை’ என்றார்கள். அவள் உண்மையை பலவிதமாக எடுத்துச்சொல்லியும், அவர்கள் காது கொடுத்து கேட்கவில்லை.

தனது பெற்றோர் முழுமையாக அவரை நம்புவதையும், தன் வார்த்தைகளை அவர்கள் நம்பாததையும் புரிந்துகொண்ட அவளால், அந்த மாணவரிடம் தொடர்ந்து போராட முடியவில்லை. இப்போது முழுக்க பணிந்துவிட்டாள்.
அவரோடு அடிக்கடி வெளியே போகிறாள். அவரும் தனது நண்பர்களுக்கு அவளை அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். எல்லோருமாக சேர்ந்து சொந்த ஊருக்கு போவதாக கூறிக்கொண்டு, ‘டூர்’ போகிறார்கள். அவள், அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் உடன்பட்டுக்கொண்டிருக்கிறாள்.

சொந்த மகள் சொல்வதை நம்பாமல் அடுத்தவர்கள் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர் இதுபோன்ற சம்பவங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.
- உஷாரு வரும்.

மேலும் செய்திகள்