அதிரடி.. சாகசம்..ஆனந்தம்..

உலகப் புகழ் பெற்ற சாகச வீரர் ஒருவரை இப்போது சென்னையில் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு காத்திருக்கிறது.

Update: 2017-05-14 08:00 GMT
சாகச காதல் ஜோடி: லில்லியா-ஹேரிசன்

சாகச குழுவினருடன் வி.ஜி.பி.ரவிதாஸ்

இரும்புக்கயிற்றில் ‘பைக்‘ சவாரி..


30 அடி உயரத்தில் ‘வீலின்’ உள்ளே ரிக்கி. அருகில் உள்ள படத்தில் வீலுக்கு மேலே ‘ஸ்கிப்பிங்’ ஆடுகிறார்.


அமெரிக்கரான அவர், நாயகரா நீர்வீழ்ச்சியின் கரையில் வெகு நீளத்திற்கு இரும்பிலான கயிற்றைக்கட்டி அந்தரத்தில் நடந்தவர். பத்து மாடிகளை கொண்ட கட்டிடத்தின் உச்சியில் ‘வீல் ஆப் டெத்’ எனப்படும் 30 அடி உயரம் கொண்ட அபாய சாகச சக்கரத்தை நிலைநிறுத்தி, அதற்கு மேல் அந்தரத்தில் சாகசம் செய்து உலக மக்களை கவர்ந்தவர். அவர் அதே ‘வீல் ஆப் டெத்’ என்ற சாகச சக்கரத்தில் நின்று, அந்தரத்தில் ‘ஸ்கிப்பிங்’ ஆடி, இங்கே ரசிகர்களை புல்லரிக்கவைத்துக் கொண்டிருக்கிறார். அவரது பெயர் என்ரிச் என்ற ரிக்கி. வயது 32. ரிக்கியும், அவரைச் சேர்ந்த பிரபல சாகச வீரர்களும் ஒருங்கிணைந்து ‘டர்போ பிளேயர்ஸ்’ என்ற பெயரில் வி.ஜி.பி. தங்ககடற்கரையில் அதிரடி சாகச நிகழ்ச்சிகளை தினமும் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது சாகச நிகழ்ச்சிகளை ஒரு ரவுண்ட் பார்த்துவிடுவோமா!
33 மீட்டர் நீள இரும்புக்கயிறு, தரையில் இருந்து 10 மீட்டர் உயரத்தில், இரு முனைகளிலும் மிக பலமாக இணைக்கப்பட்டிருக் கிறது. அதன் ஒரு முனையில் கயிற்றுக்கு மேல் 150 சி.சி. சக்தி கொண்ட ‘பைக்’ நிறுத்தப்பட்டிருக்கிறது. பைக்கின் கீழ் பகுதியில், ஒரு வளையம் தொங்குகிறது. பத்து மீட்டர் உயர கயிற்றின் மேல் நிற்கும் பைக்கில் ஏறி ரிக்கி அமர்கிறார். அதன் கீழே தொங்கும் வளையத்தில் ஹேரட் என்ற 22 வயது அமெரிக்க சாகச வீரர் ஏறி அமர்கிறார்.

அந்தரத்தில் நடக்கும் அந்த சாகசத்தைக் காண பார்வையாளர்கள் ஆவலடைய, பைக் ஒரு முனையில் இருந்து அடுத்த முனையை நோக்கி சீறிப்பாய்கிறது. அந்த முனையை அடைந்ததும், மீண்டும் அப்படியே கயிற்றில் திரும்பி வருகிறது. ‘பைக்’ போகும்போதும், வரும்போதும் ஹேரட் அந்தரத்தில் தொங்கியபடி ஜிம்னாஸ்டிக் சாகசங்களை அரங்கேற்றுகிறார்.

பார்வையாளர்கள் உற்சாகமாக கரவொலி எழுப்ப, மின்னல் வேகத்தில் அந்த பைக்கை தலைகீழாக்கி, தானும் பைக்கோடு சேர்ந்து தலைகீழாக தொங்குகிறார் ரிக்கி. அடுத்து பைக்கை நேராக்கி, எந்த பிடிமானமும் இல்லாமல் அதன் மேல் ஏறி, பார்வையாளர்களை பார்த்து உற்சாகமாக குரல் கொடுக்கிறார். எங்கும் கரவொலி எழும்ப, அப்படியே பைக்கில் அமர்ந்து, கிளம்பிய அதே முனைக்கு திரும்பி வருகிறார்கள், இருவரும். இது ஏழு நிமிட காட்சி.

அத்தனை நேரமும் சிலிர்த்துப்போய் ஆகாயத்தையே பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களிடம், ‘இனி பூமியை பாருங்கள். இதோ இங்கே நான் ஒரு தேவதை வந்திருக்கிறேன்’ என்பதுபோல் கவர்ச்சி அழகி லில்லியா மேடையில் தோன்றினார். சிவப்பு மற்றும் நீலம் கலந்த ஜொலிஜொலிக்கும் ஜிகினா ஆடையில் தோன்றிய அவர் மெருன் நிற லிப்ஸ்டிக்குடன் ஹைஹீல்ஸ் காலணியுடன் ரம்மியமாக காட்சியளித்தார். அவர் பாலே கலந்த ஸ்டைலில் ஆடி, ரசிகர்களை பரவசப்படுத்திக்கொண்டிருந்தபோது தாடிக்கார ஹேரிசன் மேடைக்கு வந்தார்.

ஒல்லிக்குச்சியான அவர் துள்ளிக்குதித்து ‘டைவ்’ அடித்து சாகசம் செய்தார். மேடையில் இருந்து 20 அடி தூரம் வரை துள்ளிக் குதித்து விதவிதமாக கரணம்போட்டார். அதில் ஹைலைட்டாக சுவரிலே நடந்தபடி ஏறி உச்சிக்கு சென்றார், இந்த ரப்பர் உடல் மனிதர்.

அவர் பார்வையாளர்களின் கரவொலியை கைஅசைத்து ஏற்றபடி உள்ளே செல்ல, அடுத்த காட்சிக்காக லில்லியாவும், ஹேரட்டும் வந்தார்கள். ஐந்து ஸ்டீல் நாற்காலிகளை லில்லியா தூக்கிக் கொடுக்க அதனை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி அதன் மேல் நின்றபடி ஹேரட் ஜிம்னாஸ்டிக் சாகசங்கள் செய்தார். நாற்காலிகளின் உச்சியில் நின்று அவர் செய்த ஜிம்னாஸ்டிக் சாகசங்கள் வியக்கவைத்தன.

அடுத்து ரிக்கி பார்வையாளர்களை பரவசப்படுத்தும் ‘வீல் ஆப் டெத்’ சாகசத்தை செய்ய வந்தார். இந்த வீல் 30 அடி உயரம் கொண்டது. அதில் இருக்கும் பெரிய வட்டத்தில் ஏறி நின்ற அவர் அங்கும் இங்குமாக ‘வீலை’ இயக்கி, உச்சி வரை சென்றார். அந்த வட்டத்திற்குள்ளே நின்று முதலில் சாகசம் செய்தவர் பின்பு, வட்டத்தின் மேலே ஏறி எந்த பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் ஏறி நடந்தார். சிறிது நேரம் மேலே நின்றுகொண்டு ஸ்கிப்பிங் விளையாடி பார்வையாளர்கள் அடிவயிற்றில் பயம் பரவச் செய்தார். அத்தனை திரில். உச்சகட்டமாக முகத்தில் கறுப்பு முகமூடி அணிந்து கண்களை மறைத்துக்கொண்டும், வீலில் அந்தரத்தில் பிடிக்காமலே நடந்துகாட்டினார்.

ரசிகர்கள் மெய்சிலிர்த்துப்போய் எழுந்து நின்று கரவொலி எழுப்ப, ரிக்கி தானாகவே இயங்கி, வீலை தனது கட்டுப்பாட்டுக்குகொண்டு வந்து நிலை நிறுத்தி உற்சாகமாக கீழே குதித்து, கரவொலிக்கு தலைவணங்கினார்.
ஜூன் 4-ந்தேதி வரை நடைபெறும் இந்த அமெரிக்க குழுவின் சாகசம் தினமும் 1.30, 3.30, 5.00, 6.30 ஆகிய நான்கு காட்சிகளாக அரங்கேறுகிறது. நான்கு சாகச கலைஞர்கள் இதில் இடம்பெறு கிறார்கள். இந்த சாகச குழுவை ஒருங்கிணைப்பவர் ஆலிவுட் பட சண்டைக்காட்சி வீரர் ரெட் ஹார்டன். 200 சினிமாக்களில் நடித் திருக்கும் இவரும் சென்னையில் முகாமிட்டிருக்கிறார்.
அந்த காட்சி நிறைவடைந்ததும் ஓய்வெடுக்க பின்னால் இருக்கும் குளுகுளு அறைக்கு சென்ற சாகச குழுவை பேட்டி எடுக்க சென்ற நமக்கு லேசான இன்ப அதிர்ச்சி. ரெட் ஹார்டன் மீசையை முறுக்கிவிட்டு

கூர்மைப்படுத்திக்கொண்டிருக்க- ஹேரட் தலைகீழாக நின்று யோகாசனம் செய்துகொண்டிருக்க- ரிக்கி தரையில் ரப்பர் ஷீட் விரித்து உடலை நெகிழவைத்துக்கொண்டிருக்க- லில்லியாவும், ஹேரிசனும் நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் காதல்வசப்பட்ட நிலை தென்பட, நாம் அது பற்றி கேட்டதும், “ஆமாம் நாங்கள் காதலர்கள்தான். சீனாவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த எங்கள் காதலை இந்தியாவில் வளர்த்துக்கொண்டிருக்கிறோம். ஆகஸ்டு மாதம் உக்ரைனில் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம்” என்றார்கள்.

லில்லியாவுக்கு 22 வயது. 176 செ.மீ. உயரமும், 57 கிலோ எடையும் கொண்டவர். ஜிம்னாஸ்டிக் மற்றும் பல்வேறு வகையான நடனங்கள் கற்றுத் தேர்ந்தவர்.
“நான் ஒரு பால்ரூம் டான்ஸராக என் தொழில் வாழ்க்கையை தொடங்கினேன். உலகப் புகழ்பெற்ற ‘தீம் பார்க்’களில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த கலர்புல்லான அணிவகுப்பு நடக்கும். அதில் நான் சிறகு முளைத்த தேவதையாக தோன்றுவேன். உலகின் பல நாடுகளுக்கு சென்றிருக்கிறேன்.

 சீனாவில் உள்ள தீம் பார்க் ஒன்றில் நானும், ஹேரிசனும் வெவ்வேறு குழுக்களில் சாகசம் செய்துகொண்டிருந்தோம். அங்குதான் முதல் முறையாக சந்தித்தோம். கண்டதும் எங்களுக்குள் காதல் வந்துவிட்டது” என்றார்.
லில்லியா, இந்திய பெண்கள் மூக்குத்தி அணிவது போல் மூக்கில் சானியா மிர்சா மாடல் வளையம் மாட்டியிருக்கிறார். இங்குள்ள பெண்கள் புடவைகட்டியிருக்கும் பாங்கும், அவர்கள் வைத் திருக்கும் பொட்டும் தன்னை கவர்வதாக சொல்கிறார். தமிழக பெண்களின் நீண்ட கருகரு கூந்தலைப் பார்த்து சற்று பொறாமை கொள்கிறார். இவரது கை விரலில் வருங்கால கணவர் அணிவித்த நிச்சயதார்த்த மோதிரம் மின்னுகிறது. அதை நம்மிடம் காட்டி மகிழ்ந்தவர், காதலர் வழங்கிய இன்னொரு விலைமதிப்பற்ற காதல் பரிசை உடலில் மூடி வைத்திருக்கிறார். அந்த ரகசியத்தை காதலர் ஹேரிசன் போட்டுஉடைத்துவிட்டார்.

அதாவது காதலர்கள் இருவரும் மும்பைக்கு சென்றிருக்கிறார்கள். அங்கே பிரபலமான டாட்டூ கலைஞர் ஒருவரை சந்தித்திருக்கிறார்கள். அவரிடம் இருவரும் இணைந்து, கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் ரூபாய் கொடுத்து இருவர் உடலிலும் பச்சைக்குத்தியிருக்கிறார்கள். அதாவது ஹேரிசன் உடலில், இதயம் இருக்கும் பகுதியில் ஆண் மான் உருவம் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. லில்லியாவின் உடலில் அதே பகுதியில் வலது புறம் பெண் மான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இருவரும் அருகருகே நிற்கும்போது இரண்டு மான்களும் ஜோடியாக நிற்பதுபோல் தோன்றும். ஹேரிசன் மட்டும் அந்த காதல் மானை நமக்கு காட்டினார். லில்லியா அதை காதலர் மட்டுமே பார்க்கவேண்டும் என்று விரும்புகிறார்.

“நான் ஜிம்னாஸ்டிக் வீரர். மிக உயரத்தில் இருந்து கீழே குதிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். கிட்டத்தட்ட 15 வருடங்களாக உலகம் சுற்றிக்கொண்டிருக் கிறேன். வருடத்தில் 8 மாதங்கள் சம்பாதிப்பேன். மீதி நான்கு மாதங்கள் ஓய்வில் இருப்பேன். நாங்கள் திருமணத்திற்கு பிறகு இப்படி நாடுகளை சுற்றிக்கொண்டிருக்காமல் தீம்பார்க்குகளின் தலைநகரமான ஓர்லோண்டாவில் உள்ள ஏதாவது ஒரு பூங்காவில் நிரந்தரமாக வேலைபார்க்கத் தொடங்கிவிடுவோம். அங்கேயே மகிழ்ச்சியாக குடும்பம் நடத்த விரும்பு கிறோம்” என்றார், ஹேரிசன்.

அடுத்து ‘வீல் ஆப் டெத்’ உலகப் புகழ் பெற்ற சாகச வீரர் ரிக்கியுடன் பேசினோம். “எங்கள் குடும்பத்தில் நான் ஏழாவது தலைமுறை சாகச கலைஞன். 18-ம் நூற்றாண்டில் இருந்து இந்த தொழிலில் ஈடுபட்டிருக் கிறோம்” என்று கூறும் இவர், கிட்டத்தட்ட பத்து வருடங்களாக உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறார்.

இவரது எடை 115 கிலோ. அந்த பிரமாண்டமான வீலை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள இவருக்கு, இந்த எடை தேவையாம்.
இந்த சாகச கலைஞர்களுக்கு இங்குள்ள உணவுகள் ரொம்ப பிடித்துப்போய்விட்டது. கோழி இறைச்சியை அதிக அளவில் சேர்த்துக்கொள்கிறார்கள். பரோட்டாவையும் விரும்புகிறார்கள். சைனீஸ் சூப்பும் இவர்களுக்கு பிடித்த உணவுகளுக்கான பட்டியலில் இருக்கிறது. ‘காபி’யும் அதிகம் பருகுகிறார்கள். “சென்னை வெயில்தான் எங்களை கொஞ்சம் கஷ்டப்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் இங்குள்ள ரசிகர்கள் தரும் உற்சாகத்தில் அந்த உஷ்ணம் குறைந்து குளிர்ச்சியை அனுபவிப்பது போல் இருக்கிறது” என்று அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அடுத்த காட்சிக்கான இசை ஒலிக்கத் தொடங்கியது.

வி.ஜி.பி.பொழுதுபோக்கு பூங்காவின் நிர்வாக இயக்குனர் வி.ஜி.பி.ரவிதாஸ், “இது போன்ற சாகச காட்சிகள் இந்த தலைமுறைக்கு மிக அவசியமானதாக இருக்கிறது. ஏன்என்றால் சாதாரண பிரச்சினைகளையே எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் மனந்தளர்ந்து போகிறார்கள். எதையும் எதிர்கொண்டு கடுமையாக போராடி ஜெயிக்கவேண்டும் என்ற எண்ணமும் குறைந்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற சாகச காட்சிகளை பார்க்கும்போது அவர்களிடம் மனோதைரியம் அதிகரிக்கும். உடல்வலுவும், உடற்பயிற்சியும் மிக முக்கியம் என்பதையும் புரிந்துகொள்வார்கள். உடல்வலுவும்,

மனோதைரியமும் இருந்தால், இவர்களைப் போன்று தம்மாலும் சாகசத்திறனை பெற முடியும் என்பதை உணர்த்தத்தான் உலகிலே சிறந்த சாகச குழுக்களை ஒவ்வொரு ஆண்டும் இங்கே அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துகிறோம்..” என்றார்.

வெளியே எட்டிப்பார்த்தோம். திரளான கூட்டம்! கரவொலிக்கு மத்தியில் அடுத்த காட்சி அரங்கேறியது..

இதுதான் இவர்கள் வாழ்க்கை! இதுதான் இவர்கள் பயணம்!

மேலும் செய்திகள்