தார்ப்பாய் அமைக்கும் பணியை முறைப்படுத்தி வழங்க கோரி கிராம மக்கள் போராட்டம்
தார்ப்பாய் அமைக்கும் பணியை முறைப்படுத்தி வழங்க கோரி மணல் லாரிகளை மறித்து கிராம மக்கள் போராட்டம்
கல்லக்குடி
விரகாலூர் மணல் குவாரியில் மணல் ஏற்றும் லாரிகளுக்கு தார்ப்பாய் அமைக்கும் பணியை தினம் ஒரு கிராமத்திற்கு என முறைபடுத்தி வழங்க வலியுறுத்தி நத்தம் கிராம மக்கள் லாரிகளை மறித்து போராட்டம் நடத்தினர்.
மணல் குவாரி
புள்ளம்பாடி ஒன்றியம் விரகாலூர்–தின்னகுளம் கிராமத்தில் அரசு மணல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரிக்கு நத்தம் கிராமம் வழியாக லாரிகள் மணல் ஏற்ற வந்து செல்லும். இந்நிலையில் மணல் குவாரியை அரசே ஏற்று நடத்தும் என முதல்–அமைச்சர் கூறியதை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமையன்று பொதுப்பணித்துறை அதிகாரிகளால் பூஜை செய்து மணல்குவாரி செயல்பட தொடங்கியது.
இந்நிலையில் தின்னக்குளம், கேவிபேட்டை பகுதி நில உரிமையாளர்கள் பட்டா நிலத்தில் லாரிகள் செல்வதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், விரகாலூர் நத்தம் கிராமத்தினர் வீட்டிற்கு ஒருவருக்கு மணல் லாரிகளுக்கு தார்ப்பாய் கட்டும் வேலையை தினம் ஒரு கிராமத்திற்கு என முறைபடுத்தி வழங்க வேண்டும் என்றும், லாரிகள் கிராமத்தில் ஒரே நேரத்தில் அதிகமாக செல்வதால் கிராமமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எனவே லாரிகளையும் முறைபடுத்தி குவாரிக்குள் மணல் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி நத்தம் கிராம மக்கள் லாரிகளை மறித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல் அள்ளும் பணிகள் பாதிப்பு
இதனால் மணல் குவாரியிலிருந்து நத்தம் கிராமம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட லாரிகள் கிராம பகுதிகளிலும், சாலைகளிலும் அணிவகுத்து நின்றன. இது பற்றி அறிந்த தாசில்தார் ஜவகர்லால் நேரு போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முடியரசன், கிராம முக்கியஸ்தர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்கள் தெரிவித்ததை அடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சுமார் 7 மணி நேரம் மணல் அள்ளும் பணிகள் பாதிக்கப்பட்டன.