பெரம்பலூர் மாவட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு: 14 வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் ரத்து
பெரம்பலூர் மாவட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு: 14 வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் ரத்து அதிகாரிகள் நடவடிக்கை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட பள்ளி வாகனங்கள் வருடாந்திர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்ட 14 வாகனங்களுக்கு தகுதி சான்றினை தற்காலிகமாக ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
பள்ளி வாகனங்கள் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ–மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக 340 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. கோடை விடுமுறை முடிந்து இன்னும் சில வாரங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பாதுகாப்பு கருதி பள்ளி வாகனங்களை வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளும் நிகழ்ச்சி பெரம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியின் போது பள்ளி வாகன டிரைவர்கள் 5 வருட அனுபவம் பெற்றவராக இருக்கின்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பள்ளி வாகனத்தை ஓட்டி வரும் போது போட்டி போட்டு கொண்டு அதி வேகமாக செல்லக்கூடாது. குடிபோதையில் வாகனத்தை இயக்க கூடாது, வாகன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து டிரைவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
பல்வேறு கட்டங்களில் சோதனை
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 272 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) மனோகரன் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) அம்பிகாபதி ஆகியோர் கொண்ட மாவட்ட பள்ளி வாகன ஆய்வுக்குழுவினர் பள்ளி வாகனங்களை தனித்தனியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது, பள்ளி வாகனங்களில் உள்ள அவசரகால கதவு தடையின்றி இயங்குகிறதா? வேகக்கட்டுப்பாட்டு கருவி சரியான வேகத்தை கணக்கிட்டு காட்டும்படி உள்ளதா? தீயணைப்பு கருவியானது காலாவதியாகாமல் இருக்கிறதா? முதல் உதவிப்பெட்டியில் மருந்துகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருக்கிறதா? வாகனத்தினுள் இருக்கும் தரைத்தளம் மற்றும் படிக்கட்டுகள், இருக்கைகள் உள்ளிட்டவை சேதமடையாமல் இருக்கிறதா? புத்தகப்பைகளை வைப்பதற்கான "ரேக்குகள்" இடையூறின்றி வாகனத்தினுள் வைக்கப்பட்டுள்ளதா? என பல்வேறு கோணங்களில் வாகனங்களை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
14 வாகனங்களுக்கு தகுதி சான்று ரத்து
ஆய்வின் போது சில பள்ளி பஸ்களை வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் நேரடியாக ஓட்டி பார்த்தும், சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. பள்ளி வாகனங்களின் காப்பு சான்று, அனுமதி சான்று (பர்மிட்) ஆகியவை நடப்பாண்டில் இருக்கிறதா? என்பதனையும் ஆராய்ந்து பார்த்தனர். ஆய்வின் முடிவில் வேகக்கட்டுப்பாட்டு கருவி கோளாறுடன் இருந்த மற்றும் தீயணைப்பு கருவி சேதமடைந்திருந்த, வாகனங்களின் மேற்கூரை, படிகட்டு, தளம் உள்ளிட்டவை சேதமடைந்திருந்ததாக 14 வாகனங்களுக்கு குறைகள் கண்டறியப்பட்டன. இதனால் அந்த பள்ளி வாகனங்களின் தகுதிசான்றினை (எப்.சி.) தற்காலிகமாக ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் பேட்டி
பள்ளி வாகனங்கள் ஆய்வு உட்படுத்தப்பட்டது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் நிருபர்களிடம் கூறுகையில், பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளி வாகனங்களில் சிறப்பு விதிப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. சிறுசிறு குறைகள் கண்டறியப்பட்டு 14 வாகனங்களின் தகுதி சான்று தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட வாகனங்கள் மட்டும் குறைகளை நிவர்த்தி செய்த பின்னர் வருகிற 18, 20–ந்தேதிகளில் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தகுதி சான்று வழங்கப்படும். மேலும் ஆய்வுக்கு வராத பள்ளி வாகனங்களும் சில நாட்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பள்ளிகளில் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறினார்.